பெங்களூரு: பா.ஜ., - எம்.பி., கோட்டா சீனிவாச பூஜாரி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய, முதல்வர் சித்தராமையாவை கண்டித்து, பா.ஜ., தலைவர்கள் மவுன போராட்டம் நடத்தினர்.சில நாட்களுக்கு முன்பு, பெங்களூரில் முதல்வர் சித்தராமையா ஊடகத்தினர் சந்திப்பு நடத்தினார். அப்போது உடுப்பி - சிக்கமகளூரு பா.ஜ., - எம்.பி., கோட்டா சீனிவாச பூஜாரி, பா.ஜ., அரசில் அமைச்சராக இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார்.இதனால் கோபம் அடைந்த சீனிவாச பூஜாரி, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை, முதல்வர் திரும்பப் பெற வேண்டும் என, வலியுறுத்தினார்.முதல்வர் சித்தராமையாவை கண்டித்து, பெங்களூரு, விதான்சவுதாவின், காந்தி உருவச்சிலை அருகில் கோட்டா சீனிவாச பூஜாரி தலைமையில், பா.ஜ., தலைவர்கள் நேற்று மவுன போராட்டம் நடத்தினர். மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் உட்பட, பல தலைவர்கள் பங்கேற்றனர்.சீனிவாச பூஜாரி பேசுகையில், ''என் பதவிக் காலத்தில், எந்த ஊழலும் நடக்கவில்லை. என் மீது சுமத்திய குற்றச்சாட்டை, முதல்வர் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் என் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என்றார்.