| ADDED : ஜூன் 16, 2024 10:53 PM
சாம்ராஜ்பேட்: சொத்துக்காக சொந்த தங்கையை கொலை செய்த அண்ணனும், அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரின் சாம்ராஜ்பேட்டில் வசித்தவர் சோமினி சத்யபாமா, 49. இவர், ஐ.டி.சி., வின்ட்ஸர் மேனர் ஹோட்டலில் பணியாற்றினார். இவரது அண்ணன் சிவசங்கர், 64. இவர்களுக்கு சாம்ராஜ்பேட்டில் பரம்பரை சொத்து உள்ளது. பல வீடுகளின் வாடகை வருகிறது. சொத்துகளில் சத்யபாமா அதிக பங்கு பெற்றுள்ளார். இதனால் அண்ணன் தகராறு செய்தார். இந்த விவாதம் நீதிமன்றம் வரை சென்றது.சத்யபாமாவை கொலை செய்தால், சொத்து கிடைக்கும் என, சிவசங்கரின் குடும்பத்தினர் துாண்டிவிட்டனர். இவரும் தன் பிள்ளைகள் மற்றும் உறவினர் ஆகாஷின் உதவியுடன், கொலைக்கு சதி திட்டம் தீட்டினார்.சத்யபாமா, ஜூன் 11ல் மாலை பணி முடிந்து, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிவசங்கரின் மகன் சாகரும், ஆகாஷும் பைக்கில் பின் தொடர்ந்து, சத்யபாமாவை ஆயுதங்களால் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்தார்.இவரது மகன் அனில்குமார் அளித்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சிவசங்கரின் சதி கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் சிவசங்கர், அவரது மனைவி காயத்ரிதேவி, மகன்கள் சாகர், திலீப், மகள் பூஜா, உறவினர் ஆகாஷ் ஆகியோரை, நேற்று முன் தினம் ஹைகிரவுண்ட் போலீசார் கைது செய்தனர்.