| ADDED : ஜூலை 13, 2024 01:13 AM
காத்மாண்டு: நேபாளத்தில் பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, இரண்டு பஸ்கள் ஆற்றில் கவிழ்ந்தன. இதில் பயணித்த ஏழு இந்தியர்கள் உட்பட 65 பேர் மாயமாகினர். நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று அதிகாலை, காத்மாண்டு நோக்கிச் சென்ற பஸ்சில் ஏழு இந்தியர் உட்பட 24 பயணியரும், கவுர் என்ற இடத்துக்கு சென்ற பஸ்சில் 41 பேரும் பயணித்தனர். இந்த பஸ்கள் சித்வான் மாவட்டத்தில் உள்ள நாராயண்காட் - முக்லிங் சாலையில் சென்றபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.இதில் இரண்டு பஸ்களும் திரிசூலி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது கவுர் நோக்கி சென்ற பஸ்சில் இருந்த மூவர் குதித்து உயிர் தப்பினர். மற்றவர்களைக் காணவில்லை. மாயமான இந்தியர்கள், சந்தோஷ் தாகுர், சுரேந்திர ஷா, ஆதித் மியான், சுனில், ஷாநவாஸ் ஆலம், அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொருவர் யார் என தெரியவில்லை. இந்நிலையில், நிலச்சரிவு இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.மேலும், ஆற்றில் இரு பஸ்கள் அடித்துச் செல்லப்பட்ட பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதையடுத்து நேபாள போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை துவங்கியுள்ளனர். மாயமான 65 பேர் கதி என்ன என்று இதுவரை தெரியவில்லை.