| ADDED : ஜூலை 31, 2024 01:28 AM
மும்பை, மஹாராஷ்டிராவின் வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்க பெண் லலிதா கேயி, 50, நேற்று முன்தினம் மீட்கப்பட்டார். தன் முன்னாள் கணவர், இவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் தந்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணின் முன்னாள் கணவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.மஹாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டம், சோனுர்லி கிராம வனப்பகுதியில் சமீபத்தில் பெண் ஒருவர் மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் உதவி கேட்டு அழுதபடி இருந்துள்ளார். மேய்ச்சலுக்காக அவ்வழியே சென்ற நபர் பெண்ணின் அழுகுரலை கேட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவரை மீட்டு கோவாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.அப்பெண்ணின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அதில், அவரது அமெரிக்க பாஸ்போர்ட், தமிழக முகவரி உடைய ஆதார் அட்டை, மருந்துச் சீட்டு ஆகியவை இருந்தன. விசா காலம் முடிந்த பின்னும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்தியாவில் தங்கியிருப்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசாரிடம் அவர் அளித்த எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தில், தன் முன்னாள் கணவர் காட்டுக்கு அழைத்துச் சென்று சங்கிலியால் கட்டிப்போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தை போலீசார் இன்னும் பதிவு செய்யவில்லை. இருப்பினும், அப்பெண்ணின் முன்னாள் கணவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். அவர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுவதால், மஹாராஷ்டிரா போலீசார் தமிழகத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.