அமராவதி, 'சட்டசபைக்குள் மீண்டும் நுழைந்தால் முதல்வராக தான் வருவேன்' என, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் போட்ட சபதத்தை நிறைவேற்றி, நேற்று சட்டசபைக்கு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, அவரது கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 13ல் தேர்தல் நடந்தது. இதில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பூர்ண கும்ப மரியாதை
இதையடுத்து, ஆந்திராவின் புதிய முதல்வராக, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக பதவி ஏற்றார். புதிய ஆட்சி அமைந்தபின், முதன்முறையாக ஆந்திரா சட்டசபை நேற்று கூடியது. இதையொட்டி, இரண்டரை ஆண்டுகளுக்கு பின் சட்டசபைக்கு வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.தரையில் படுத்து வணங்கி சட்டசபைக்குள் நுழைந்த அவரை, துணை முதல்வர் பவன் கல்யாண் பூங்கொத்து தந்து வரவேற்றார். பின், எம்.எல்.ஏ.,வாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அதைத் தொடர்ந்து பிற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்யப்பட்டது. கடந்த 2019ல் சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானார்.சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே அவ்வப்போது கருத்து மோதல் வெடித்து வந்தது. சபதம்
கடந்த 2021 நவ., 19ல், சந்திரபாபு நாயுடுவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை, ஒய்.எஸ்.ஆர்.காங்., உறுப்பினர்கள் ஆபாசமாக பேசினர். இதனால், கண்ணீர் வடித்தபடியே சட்டசபையை விட்டு வெளியேறிய சந்திரபாபு நாயுடு, 'இனி முதல்வராக பொறுப்பேற்ற பின்தான் சட்டசபைக்குள் காலடி எடுத்து வைப்பேன்' என, கண்ணீர் மல்க சபதம் செய்தார்.அதற்கு பின், இரண்டரை ஆண்டுகளாக சபைக்கு வரவில்லை.இந்நிலையில் மீண்டும் முதல்வராகி, இரண்டரை ஆண்டுகளுக்கு பின், தற்போது சட்டசபைக்குள் வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு, அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.