ஷிவமொகா: ''காங்கிரசுடன் உள்ஒப்பந்தம் செய்து, ஷிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா வெற்றி பெற்றார்,'' என்று, பாஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா குற்றம்சாட்டி உள்ளார்.பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா. இவரது மகன் காந்தேஷ், ஹாவேரி தொகுதியில், பா.ஜ., 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஈஸ்வரப்பா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது குற்றம்சாட்டினார்.ஷிவமொகாவில் எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திராவுக்கு எதிராக, சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஷிவமொகா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும் அவர், எடியூரப்பா, அவரது குடும்பத்தை விமர்சித்து பேசி வருகிறார்.இந்நிலையில், ஷிகாரிபுராவில் ஈஸ்வரப்பா நேற்று அளித்த பேட்டி:எடியூரப்பா எனக்கு ஏன் அநியாயம் செய்தார் என்று தெரியவில்லை. ஷிகாரிபுரா மக்களை ஒரு குடும்பம், ஆட்டி படைக்கிறது. அப்பா, மகன் வேண்டாம் என்று இந்த தொகுதி மக்கள் முடிவு செய்து விட்டனர். ராகவேந்திராவை தோற்கடித்து, எடியூரப்பாவுக்கு பாடம் புகட்டுவேன்.இளைஞர்கள் அரசியலில் வளர வேண்டும் என்று, பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் கர்நாடகா பா.ஜ.,வில் இளைஞர்களை வளர விடாமல், எடியூரப்பா பார்த்து கொள்கிறார். தனி கட்சி ஆரம்பித்து, ஆறு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றார். அவர் மட்டும் தான், லிங்காயத் சமூக தலைவரா.கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் உள்ஒப்பந்தம் செய்து, ஷிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா வெற்றி பெற்றார். அப்படி செய்யவில்லை என்று, சாமி மீது சத்தியம் செய்ய தயாரா.இவ்வாறு அவர் கூறினார்.