உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் மீது சிவகுமாரிடம் காங்கிரசார் புகார்

எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் மீது சிவகுமாரிடம் காங்கிரசார் புகார்

சிக்கபல்லாப்பூர், : 'லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாப்பூரில் காங்கிரஸ் தோற்றதற்கு, அக்கட்சியின் சிக்கபல்லாப்பூர் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் காரணம்' என, துணை முதல்வர் சிவகுமாரிடம், அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாப்பூர் தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட, முன்னாள் அமைச்சர் சுதாகர் வெற்றி பெற்று எம்.பி., ஆகி உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, சுதாகரை, லோக்சபா படியை மிதிக்க விட மாட்டோம் என, சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கூறி இருந்தார்.சிக்கபல்லாப்பூரில் காங்கிரஸ் வேட்பாளரை விட, சுதாகர் கூடுதலாக ஒரு ஓட்டு வாங்கினாலும், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாகவும் பிரதீப் கூறி இருந்தார். ஆனால் சுதாகர் 1,63,460 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், சிக்கபல்லாப்பூர் தொகுதியிலும் 7,000 ஓட்டுகள் முன்னிலை பெற்றிருந்தார். இதனால் பிரதீப் ஈஸ்வர் எம்.எல்.ஏ., பதவியை, ராஜினாமா செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

போலி கடிதம்

இந்நிலையில் அவரது ராஜினாமா கடிதம், சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஆனால் அது போலி கடிதம் என, பிரதீப் ஈஸ்வர் கூறி இருந்தார்.போலி ராஜினாமா கடிதத்தை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது, சிக்கபல்லாப்பூர் மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி செயலர் ஜெகதீஷ் என்பது தெரிந்தது. இதையடுத்து ஜெகதீஷை கட்சியில் இருந்து, ஆறு ஆண்டுகள் நீக்கி, ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் ரகுமான்கான் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

வெட்டி பேச்சு

இந்நிலையில், சிக்கபல்லாப்பூர் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் நந்தி அஞ்சனப்பாவும், ஜெகதீசும் நேற்று காலை பெங்களூரு வந்தனர். தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபாட் ஆகியோரை சந்தித்து பேசினர்.அதன்பின்னர் துணை முதல்வர் சிவகுமாரையும் அவர்கள் சந்தித்தனர். கட்சியில் இருந்து தன்னை நீக்கிய உத்தரவை திரும்ப பெற வேண்டும் என, சிவகுமாரிடம், ஜெகதீஷ் கேட்டுக் கொண்டார்.சிக்கபல்லாப்பூர் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரின் வெற்றிக்காக, நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வேலை செய்தோம். எம்.எல்.ஏ., ஆனதும் மூத்த தலைவர்களை புறக்கணித்தார். சிக்கபல்லாப்பூரில் போட்டியிட்ட ரக் ஷா ராமையா நல்ல மனிதர். எளிதில் வெற்றி பெற்றிருக்கக் கூடியவர். ஆனால் பிரதீப் ஈஸ்வரின் வெட்டிப் பேச்சால், அவர் தோற்றுவிட்டார் என, சிவகுமாரிடம், ஜெகதீஷ் புகார் மடல் வாசித்தார்.அனைத்தையும் பொறுமையாக கேட்ட சிவகுமார், யோசித்து முடிவு எடுப்பதாக கூறி, ஜெகதீஷை அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி