பர்தமான், ''இந்த லோக்சபா தேர்தலில், 50 தொகுதிகளைக் கூட காங்., பெறாது. ஓட்டு வங்கி அரசியல் செய்யும் அக்கட்சி, இருக்கும் இடம் தெரியாமல் போகும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.கடந்த 2019 லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில், காங்., முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் போட்டியிட்டார். வயநாட்டில் வென்ற அவர், அமேதியில், பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். இந்த முறை வயநாட்டில் ராகுல் மீண்டும் போட்டியிட்டார். இதற்கான ஓட்டுப்பதிவு கடந்த 26ல் நடந்து முடிந்தது. அமேதியில் ராகுல் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன் தாயார் சோனியா எம்.பி.,யாக இருந்த ரேபரேலி தொகுதியில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தின், பர்தமான் - -துர்காபூர், கிருஷ்ணாநகர் லோக்சபா தொகுதிகளில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: மத்தியில், காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டை பறித்து, ஓட்டு வங்கி அரசியலுக்காக, முஸ்லிம்களுக்கு அளித்து விடும். பார்லிமென்டில் நான் முன்பே கூறியது போல, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளே தேவையில்லை. தோற்று விடுவோம் என்பதை முன்கூட்டியே காங்., அறிந்திருக்கிறது. அதனால் தான், அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா, ராஜ்யசபா வழியாக பார்லி.,க்குள் நுழைந்துள்ளார்.காங்கிரசின் இளவரசரான ராகுல், வயநாட்டில் தோற்று விடுவோம் என்பதை உணர்ந்து, ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அமேதியில் போட்டியிட பயந்து ரேபரேலியில் அவர் களமிறங்குகிறார். 'பயப்பட வேண்டாம்; பயந்து ஓட வேண்டாம்' என்பதை மட்டும், நான் அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்த லோக்சபா தேர்தலில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளையே காங்., பெறும். அக்கட்சி என்ன தான் செய்தாலும், 50 தொகுதிகளுக்கு மேல் பெற முடியாது. எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டை பறிக்க மாட்டோம் என்றும், மத அடிப்படையில் ஓட்டு வங்கிக்கு இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்றும் காங்கிரசும், அதன், 'இண்டியா' கூட்டணியும் எழுத்துப்பூர்வமாக எழுதி தர முடியுமா? ஓட்டு வங்கி அரசியல் செய்வதில், காங்., - திரிணமுல் காங்., - இடதுசாரி ஆகியவை கை தேர்ந்தவர்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஓட்டு வங்கிக்காக திரிணமுல் காங்., எதிர்ப்பது வெட்கக்கேடானது.இவ்வாறு அவர் பேசினார்.