| ADDED : ஜூலை 12, 2024 02:25 AM
மும்பை, பாஸ்போர்ட் இல்லாத குற்றவாளிக்கு ஜாமின் வழங்கும்போது, புதிதாக பாஸ்போர்ட் எடுத்து வந்து, அதை தாக்கல் செய்யும்படி செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் உயர் நீதிமன்றமே குழம்பிப்போனது.கோவாவைச் சேர்ந்த 18 வயது இளைஞர், கொலை முயற்சி வழக்கில், கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டார். அதே மாதம், அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி கோவா செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த நிபந்தனைகளில், தினமும் போலீஸ் ஸ்டேஷன் வந்து கையெழுத்திடவும், அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படியும் கூறப்பட்டிருந்தது. அந்த குற்றவாளியிடம் பாஸ்போர்ட் இல்லாததால், நிபந்தனையில் மாற்றம் செய்யும்படி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நிபந்தனையை மாற்றுவதற்கு பதில், அதை நான்கு மாதங்களுக்கு நீதிபதி நிறுத்தி வைத்தார். அந்த காலகட்டத்திற்குள் புதிதாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, அதை பெற்றுவந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார்.இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளையில் குற்றவாளி மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பாரத் தேஷ்பாண்டே திகைத்துப் போனார். ''ஜாமின் வழங்கும் போது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.''அதே வேளையில், புதிதாக பாஸ்போர்ட் எடுக்கும்படி உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது,'' எனக் கூறிய நீதிபதி, அந்த குறிப்பிட்ட நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.