பலத்த மழைக்கு தர்கா சுவர் இடிந்து வாலிபர் பலி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
புதுடில்லி:பலத்த மழை காரணமாக தர்கா சுவர் இடிந்து ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தலைநகர் டில்லி மற்றும் புறநகரில் நேற்று அதிகாலையில் இருந்தே பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடும் போக்குவரத்து நெரிசம் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.மத்திய டில்லி நபி கரீம் பகுதியில் தர்கா சுவர் நேற்று அதிகாலை 6:45 மணிக்கு, இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து 3 வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். இடிபாடுகளை அகற்றி அதற்குள் சிக்கியிருந்த மூன்று பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ரஹமத்,35, என்பவர் உயிரிழந்தார். மற்ற இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத், பழைய டில்லியி மின்சார ரிக்ஷா ஓட்டி வந்தார். தர்கா சுற்றுச் சுவருக்கு அருகே படுதா கட்டி அங்கு தங்கியிருந்தார்.நேற்று காலை 8:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், சப்தர்ஜங்கில் 2.96 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல ரிட்ஜ் - 6.94, டில்லி பல்கலை - 5.65, லோதி சாலை - 2.82, அய நகர் - 1.95 செ.மீ.,யும், பாலத்தில் 18 மி.மீ.,யும் மழை பதிவாகியிருந்தது.நேற்று அதிகாலை 2:30 மணி முதல் 5:30 மணி வரை கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. தவுலா குவானில் இருந்து மஹிபால்பூர் செல்லும் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. கல்காஜி - டிபன்ஸ் காலனி செல்லும் சாலையில் லாலா லஜபதி ராய் மார்க், புத்த விஹார் வெளிவட்ட சாலை, ரோஹ்தக் சாலை, கன்ஜாவ்லா சாலை உள்ளிட்ட சாலைகளிலும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. அதேபோல, நங்லோயில் இருந்து திக்ரி எல்லைக்கு செல்லும் சாலையிலும் கடும் நெரிசல் ஏற்பட்டது.கான்பூர் டி -பாயின்ட்டில் இருந்து மெஹ்ராலி செல்லும் சாலையிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.ஜி.டி.கே., சாலை முகர்பா சவுக்கிலிருந்து ஆசாத்பூர் சவுக் செல்லும் சாலையின் இரு வழிகளிலும் வெள்ளம் தேங்கி இருந்தது.அதேபோல, பிரதான வெளிவட்டச் சாலையில் பீரா என்கிளேவ் ரவுண்டானாவில் இருந்து பீராகர்ஹி செல்லும் சாலையில், நாகின் லேக் அபார்ட்மென்ட் அருகே தண்ணீர் தேங்கி வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியின் பல இடங்களிலும் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. ஜன்சத் தாலுகா ஜட்வாரா கிராமத்தில் ஒரு வீடு இடிந்து அதில் வசித்த தாஹிர்,42, என்பவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், இடிபாடுகளை அகற்றி, தாஹிம் உடலை மீட்டனர். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என முசாபர் நகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.