மனித தன்மையை இழந்த தர்ஷன் முக்கிய மந்திரி சந்துரு அதிருப்தி
பெங்களூரு: ''குறுகிய காலத்தில் பணம் மற்றும் ரசிகர்கள் அதிகமானதால், தர்ஷன் குணம் மாறிவிட்டது. மனிதத் தன்மையை இழந்து விட்டார் என, தோன்றுகிறது,'' என மூத்த நடிகர், 'முக்கிய மந்திரி' சந்துரு தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:நடிகர் தர்ஷனின் தந்தை துாகுதீப் சீனிவாஸ், எனக்கு நன்றாக தெரியும். ராஜ்குமாருடன் பல படங்களில் நடித்துள்ளார். இவர் துாகுதீபுக்கு நல்ல, நல்ல கதாபாத்திரங்களை கொடுத்தார். குடும்ப விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்தார். தன் தனித்தன்மையை தக்க வைத்திருந்தார். சினிமாவில் வில்லனாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருந்தார்.துாகுதீப் சீனிவாசை, நான் அருகில் இருந்து பார்த்தவன். தர்ஷனை போன்று அவரது தந்தைக்கும், அதிகம் கோபம் வரும். ஆனால் சிறிது நேரத்தில், அது காணாமல் போகும்.தந்தையை போன்று சாதனை செய்ய வேண்டும் என்ற குணம், தர்ஷனுக்கும் உள்ளதை நான் பார்த்திருக்கிறேன்.குறுகிய காலத்தில் பணம் மற்றும் ரசிகர்கள் அதிகமானதால், தர்ஷன் குணம் மாறிவிட்டது. மனிதத் தன்மையை இழந்து விட்டார் என, தோன்றுகிறது. ஆனால் பெரிய ஸ்டார் நடிகர், மனிதனாக நடந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது. சட்டத்தை மதித்திருக்க வேண்டும்.ரேணுகாசாமியும் தவறு செய்துள்ளார். ஒரு பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியது ஏற்புடையது அல்ல. ஆனால் இவரை தண்டிக்க சட்டம் உள்ளது. கொலை செய்யும் அளவுக்கு சென்றிருக்க கூடாது. தர்ஷன் சில விஷயங்களில் முன்கோபி. உணவு சரியாக இல்லாவிட்டால், கோபம் வரும்.இது உள் நோக்கத்துடன் நடந்த கொலை அல்ல. இவர்கள் யாரும் அடிப்படையில் கொலைகாரர்கள் அல்ல. பழிவாங்க இம்சித்துள்ளனர். இது எல்லை மீறி கொலையில் முடிந்தது. பவித்ரா கவுடா செய்வதும் தவறுதான். திருமணமான ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பது குற்றம்தான்.இவ்வாறு அவர் கூறினார்.