| ADDED : ஜூலை 24, 2024 11:40 PM
பெங்களூரு, : கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமி, துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்துப் பேசி உள்ளார்.சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தர்ஷனை கைதானபோது, அவரை காப்பாற்ற காங்கிரஸ் அமைச்சர்கள் இருவர் முயற்சித்தனர்.ஆனால், 'தர்ஷன் வழக்கில் யாரும் தலையிடக் கூடாது' என, முதல்வர் சித்தராமையா கடும் எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர் தர்ஷனை காப்பாற்ற யாரும் முயற்சிக்கவில்லை.கொலை வழக்கிலிருந்து தர்ஷன் தப்பிப்பதைத் தடுக்க, அவருக்கு எதிரான வலுவான ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.தர்ஷன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தாலும், அவருக்கு எதிரான ஆதாரங்கள் மூலம் குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஜாமின் கிடைக்காது என்று கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் துணை முதல்வர் சிவகுமாரை, தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி சந்தித்துப் பேசினார்.ரேணுகாசாமி கொலை குறித்தும், தர்ஷனுக்கு ஜாமின் கிடைக்க உதவும்படியும் சிவகுமாரிடம், விஜயலட்சுமி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்கிடையில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், மனதை அமைதியாக வைத்திருக்க தினமும் காலை, மாலை அரைமணி நேரம் யோகா செய்து வருவதாகவும், யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.