உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 வயது சிறுவன் மாயம் கால்வாயில் விழுந்தாரா?

4 வயது சிறுவன் மாயம் கால்வாயில் விழுந்தாரா?

மாண்டியா: கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்ட மறுநாளே கால்வாயில் சிறுவன் அடித்து செல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.மாண்டியாவின் ஹொனகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி கஸ்துாரி. தம்பதியின் மகன் சபின், 4. இவர் நேற்று மதியம் 2:30 மணியளவில், அங்கன்வாடியில் இருந்து வீட்டுக்கு வந்தார். வீட்டின் அருகில் விளையாடினார். திடீரென சிறுவனை காணவில்லை,பெற்றோர் பல இடங்களில் தேடியும், மகனை காணவில்லை. இவர்களின் வீட்டு அருகிலேயே, விஸ்வேஸ்வரய்யா கால்வாய் பாய்கிறது. கால்வாய் அருகில் சிறுவனின் செருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. விளையாடும் போது தவறி நீரில் விழுந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.கடந்தாண்டு சரியாக மழை பெய்யாததால், கே.ஆர்.எஸ்., அணை நிரம்பவில்லை. எனவே கோடை விளைச்சலுக்கு, அணையில் இருந்து விஸ்வேஸ்வரய்யா கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கோடை விளைச்சல் பயிரிடவில்லை. ஆறு மாதங்களாக தண்ணீர் பாயவில்லை.காவிரி நீர்ப்பாசன பகுதிகளில், சில வாரங்களாக நல்ல மழை பெய்வதால், மாண்டியா மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறந்து விடும்படி போராட்டம் நடத்தினர்.அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. எனவே நேற்று முன் தினம் கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டதால், விஸ்வேஸ்வரா கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளது.தண்ணீர் வேகமாக பாய்வதால், சிறுவனை தேடுவது கஷ்டமாக உள்ளது. தண்ணீரை மூடும்படி கிராமத்தினர் வலியுறுத்தியும் அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை என, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.சிறுவன் காணாமல் போனது குறித்து, மாண்டியா ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்