மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்? தோல்வியால் காங்., தலைமை திட்டம்!
கர்நாடகாவில் லோக்சபா தேர்தலில் குறிப்பிட்ட இடங்களை பிடிக்க முடியாததால், சில மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை மாற்ற, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. விரைவில் பொறுப்பாளர்கள் மாற்றப்பட உள்ளனர்.கர்நாடகாவில் சட்டசபை தேர்தலில் கடந்தாண்டு ஒற்றுமையாக செயல்பட்டு, 135 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளனர். வாக்காளர்களிடம் காங்கிரஸ் அரசு மீது நன் மதிப்பும் ஏற்பட்டது. சட்டசபை போன்று லோக்சபா தேர்தலிலும் ஒற்றுமையாக செயல்பட்டு, அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என காங்கிரசார் நினைத்தனர். இதற்காக வேட்பாளர் தேர்வு முதல் அனைத்தையும் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ஒன்றாக இணைந்து செயல்பட்டனர்.ஆறு தொகுதிகளில் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு 'சீட்' வழங்கப்பட்டது. சீட் கொடுக்கும்போதே, வெற்றி பெற வேண்டும். இல்லையெனில், அமைச்சர் பதவியை மாற்றுவது குறித்து யோசிக்கப்படும் என எச்சரித்திருந்தது. இதில் மூன்று அமைச்சர்களின் வாரிசுகள் மட்டுமே வெற்றி பெற்றனர்.தேர்தலில் 15 முதல் 17 இடங்களில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தனர். ஆனால், ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். கல்யாண கர்நாடகாவில் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்று ஆறுதல் அடைந்தனர். இது மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. எம்.எல்.ஏ., போர்க்கொடி
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவகங்கா பசவராஜ், 'லோக்சபா தேர்தலில் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்காத அமைச்சர்கள், ராஜினாமா செய்ய வேண்டும்' என கூறியிருந்தார். இதற்கு துணை முதல்வர் சிவகுமார், 'என்னிடம் இது குறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை. தோல்விக்கான காரணம் குறித்து தொண்டர்களுடன் பேசி, எங்கு தவறு நடந்தது என்பதை சரிபார்த்து, தீர்வோடு பதில் அளிக்க வேண்டும்' என தெரிவித்தார்.காங்கிரஸ் எம்.பி., ராகுலும், 'தேர்தலில் அதிக இடம் பெறாதது குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர்கள் தோல்விக்கு அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும்' என ஏற்கனவே கூறியுள்ளார். பட்டியல்
இதையடுத்து, குடகின் போசராஜு, மைசூரின் மஹாதேவப்பா, தட்சிண கன்னடாவின் தினேஷ் குண்டுராவ், உடுப்பியின் லட்சுமி ஹெப்பால்கர் ஆகிய மாவட்ட பொறுப்புகளை மாற்றுவது குறித்து மேலிடம் ஆலோசித்து வருகிறது. விரைவில் திருத்தப்பட்ட மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.- நமது நிருபர் -