பெங்களூரு: மேற்கு வங்கத்தில் பயிற்சி டாக்டரை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்ததை கண்டித்து, மாநிலம் முழுதும் நேற்று அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் தீவிர போராட்டம் நடத்தினர். புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி., கார் மருத்துவ கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு முதுநிலை படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், சமீபத்தில் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இதை கண்டித்து, போராட்டம் நடத்தும்படி, ஐ.எம்.ஏ., எனும் இந்திய மருத்துவ அசோசியேஷன், நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று, கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளிலும் நேற்று காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, ஓ.பி.டி., எனும் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டன. அரசு மருத்துவர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.பெங்களூரின் பவுரிங், விக்டோரியா, வாணி விலாஸ், கே.சி., ஜெனரல் உட்பட அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவு இயங்கவில்லை.மாநிலம் முழுதும் இதே நிலை இருந்தது. சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனர். சுதந்திர பூங்காவில் ஒன்று திரண்ட தனியார் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி, தங்களை எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.மல்லேஸ்வரம் கே.சி., பொது மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவுக்கு, ஒரு கர்ப்பிணி பிரசவத்திற்காக வந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அங்கிருந்த ஊடகத்தினர் தலையிட்டதால், உள்பிரிவு நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இப்படி, மைசூரு, மாண்டியா, மங்களூரு, உடுப்பி, சிக்கமகளூரு, பெலகாவி, கோலார், துமகூரு உட்பட மாநிலம் முழுவதுமே தீவிர போராட்டம் நடத்தினர். ஆங்காங்கே ஊர்வலம், மனித சங்கிலி அமைத்தும், கோஷம் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை ஆங்காங்கே அவதிப்பட்டதை காண முடிந்தது.மருத்துவர்கள் போராட்டம் நடத்துவதை தெரியாமல் வந்த பலரும், ஏமாற்றத்துடன் அங்கும், இங்கும் அலைந்தனர். இறுதியில் சிகிச்சை கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா தலைமையில், மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகம் முன், அக்கட்சியின் மகளிர் பிரிவினர் போராட்டம் நடத்தினர்.மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.