புதுடில்லி: டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், கூரை இடிந்து விழுந்ததை அடுத்து, உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான சேவை, முனையம் - 1க்கு பதிலாக, 2 மற்றும் 3வது முனையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. தலைநகர் டில்லியில் நேற்று முன்தினம் அதிகாலை பலத்த மழை பெய்தது. 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால், டில்லி நகரமே ஸ்தம்பித்தது. இதனால், அங்குள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின், உள்நாட்டு விமான சேவை பகுதியான முனையம் - 1ல், கேட் - 1 முதல் கேட் - 2 வரை உள்ள கூரை இடிந்து விழுந்தது. அதை தாங்கியிருந்த இரும்பு துாண்களும், 'பிக் அப்' மற்றும் 'டிராப்' பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தன. இதில், டாக்சி டிரைவர் ரமேஷ் குமார், 45, என்பவர் உயிரிழந்தார்; எட்டு பேர் காயமடைந்தனர்.உயிரிழந்த ரமேஷ் குமார் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தோருக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.டில்லி விமான நிலையத்தில், முனையம் - 1 பகுதி உள்நாட்டு விமான சேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கூரை இடிந்து விழுந்துள்ளதால், அங்கு மறு அறிவிப்பு வரும் வரை விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், முனையம் - 1 பகுதியில் வழங்கப்பட்ட உள்நாட்டு விமான சேவை, முனையம் - 2 மற்றும் 3 பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, டில்லி சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து, சமூக வலைதளத்தில் டில்லி சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட பதிவில், 'இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், விமான சேவை வழக்கம் போல் இயங்கி வருகிறது. 'முனையம் - 1ல் மட்டும், மறு அறிவிப்பு வரும் வரை உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்படுகிறது.'அங்கு வழங்கப்பட்ட சேவை, முனையம் - 2 மற்றும் 3 பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, 'முனையம் - 1 பகுதியில் இடிந்து விழுந்த கூரையை நாங்கள் கட்டவில்லை; மேலும் அதை பராமரிக்கவும் இல்லை' என, எல் அண்டு டி நிறுவனம் விளக்கம் அளித்துஉள்ளது.இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த டாக்சி டிரைவரின் உறவினர்கள் கூறுகையில், 'விரைவில் எங்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தி, கூடுதல் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்வோம்' என்றனர்.டில்லியில் நேற்று காலையில் மழை சிறிது நேரம் விட்டிருந்த நிலையில், மதியத்துக்கு பின் மீண்டும் மழை கொட்டியது. இதனால், சாலைகளில் மீண்டும் வெள்ளம் தேங்கியது. இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'டில்லியில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். இதற்காக, 'ஆரஞ்சு அலெர்ட்' விடுக்கப்படுகிறது. இன்று மற்றும் நாளை, அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை அல்லது கனமழை பெய்யும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் மழை தொடர்பான விபத்துகளில், 10 பேர் பலியாகி உள்ளனர்.
கனமழை தொடரும்