உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாதவிடாய் பெண்களை ஒதுக்கும் சம்பிரதாயத்திற்கு முடிவு கட்டிய டாக்டர்

மாதவிடாய் பெண்களை ஒதுக்கும் சம்பிரதாயத்திற்கு முடிவு கட்டிய டாக்டர்

இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் நாட்டின் இன்னும் பல பகுதிகளில் தீண்டாமை, மூடநம்பிக்கை கடைப்பிடிக்கப்படுகிறது.கர்நாடகாவின் வடமாவட்டங்களில் வசிக்கும் மக்கள், தீண்டாமை, மூடநம்பிக்கை இன்றளவும் உள்ளது. சூரிய கிரஹணம் அன்று குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்காமல் இருக்க, மண்ணிற்குள் வைத்து மூடும் நிகழ்வுகளும் ஆண்டுதோறும் அரங்கேறுகிறது.இதுஒருபுறம் இருக்க சித்ரதுர்கா, துமகூரு மாவட்டங்களில் குழந்தை பெற்றெடுக்கும் பெண், குழந்தையுடன் 10 நாட்கள் ஊரைவிட்டு வெளியே தங்க வேண்டும் என்ற, விதிமுறை கடுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது.குளிர், மழை, வெயில் எதுவாக இருந்தாலும், குழந்தை பெற்ற பெண்களை ஊருக்குள் விடுவது இல்லை. இதனால் தாயும், சேயும் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. மாதவிடாய் நேரத்தில் பெண்களை ஊரைவிட்டு ஒதுக்கும் சம்பிரதாயமும் உள்ளது.இந்நிலையில் மாதவிடாய் நேரத்தில் ஊரைவிட்டு பெண்களை, ஒதுக்கி வைக்கும் சம்பிரதாயத்திற்கு, பெண் டாக்டர் ஒருவர் முடிவு கட்டி உள்ளார்.

காடுகொல்லர்

சித்ரதுர்கா மாவட்டம், ஹொசதுர்கா தாலுகாவில் உள்ளது சித்தயனஹட்டி கிராமம். இந்த கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில் 80 குடும்பத்தினர் காடுகொல்லர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், அவர்களை ஊரைவிட்டு, ஒதுக்கிவைக்கும் வழக்கம் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இந்த பழக்கத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டனர்.இதுபற்றி ஊர் பெரியவர்களிடம் பேசி, ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் வழக்கத்திற்கு முடிவு கட்டி உள்ளார் மூட்டுவலி சிகிச்சை டாக்டர் பிரேமா, 45.பிரேமா கூறியதாவது:எனக்கு சித்தயனஹட்டி கிராமம் தான் சொந்த ஊர். நான் சிறுமியாக இருந்தபோது, எனது தாய்க்கு மாதவிடாய் ஏற்பட்டால், மூன்று முதல் நான்கு நாட்கள் ஊருக்கு வெளியில் குடிசை அமைத்து, தங்க வைத்து விடுவர்.அம்மா மறுபடியும் வீட்டிற்கு வந்ததும், ஏன் இப்படி செய்கின்றனர் என்று கேட்பேன். இது தான் ஊர் வழக்கம். நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பார்.நான் வயதிற்கு வந்த பின், மாதவிடாய் காலத்தில் என்னையும் ஊரில் இருந்து வெளியே தங்க வைத்தனர். மாதவிடாய் நேரத்தில் ஊருக்கு வெளியே தங்கி இருந்த எனது சித்தி, பாம்பு கடித்து இறந்தார். ஆனாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

கடவுளிடம் பூ

எனது ஊர் பெரியவர்களை சந்தித்து, ஊரைவிட்டு வெளியே தங்கும் பெண்கள் சந்திக்கும், கஷ்டங்களை பற்றி எடுத்துக் கூறினேன். எங்கள் ஊரில் சிங்கபுரா என்ற கோவில் உள்ளது.கடவுளிடம் பூக்கட்டிப் போட்டு பார்க்கிறோம். கடவுள் உத்தரவு கொடுத்தால், ஊரைவிட்டு ஒதுக்கும் வழக்கத்தை கைவிடுகிறோம் என்று, ஊர் பெரியவர்கள் கூறினர்.குழந்தை பிறந்தால் தாயையும், சேயையும் ஊரைவிட்டு தள்ளி வைக்கும் வழக்கமும் இருந்தது.தற்போது வீட்டின் அருகே குடிசை அமைத்து தங்க வைக்கின்றனர். வரும் நாட்களில் வீட்டிற்குள் தங்க வைக்கவும் முயற்சி செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை