கட்டணம் உயர்வால் கொதிப்பு நடத்துநரை தாக்கிய குடிகாரர்
கொப்பால்: பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு, நடத்துநரை தாக்கிய மது போதை நபரை போலீசார் கைது செய்தனர். விஜயநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் கொப்பாலில் உள்ள ஹூலகி கிராமத்தில், மது போதையில் பஸ்சிற்காக நின்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாக காத்திருந்து பஸ் வராததால் ஆத்திரம் அடைந்து உள்ளார்.அப்போது, ஹூலகி கிராமத்தில் இருந்து கங்காவதிக்கு செல்லும் அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது, நடத்துநர் ஹனுமந்தப்பா டிக்கெட் எடுக்க கூறி உள்ளார். அவரும், ஹனுமனஹள்ளிக்கு செல்ல ஒரு டிக்கெட் கொடுக்கும் படி கூறினார். நடத்துநர் 30 ரூபாய் கேட்டு உள்ளார்.இதற்கு குடிகாரர், 'டிக்கெட்டின் விலை 26 ரூபாய் தானே; என்னை ஏமாற்ற பார்க்கிறாயா' என சத்தம் போட்டுள்ளார். பஸ்களில் டிக்கெட் விலையை அரசு உயர்த்தி விட்டது. இதனால், தற்போது டிக்கெட்டின் விலை 30 ரூபாய், உடனடியாக பணத்தை கொடுக்கும் படி நடத்துநர் கூறி உள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாய் சண்டை ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் பஸ் நின்றபோது, குடிகாரரும் நடத்துனரும் ரோட்டில் இறங்கி சண்டை போட்டு கொண்டனர். அப்போது, ஆத்திரமடைந்த குடிகாரர் சாலையில் கிடந்த கற்களை எடுத்து, நடத்துநரின் முகத்தில் தாக்கினார். இதில், நடத்துநர் ஹனும்ந்தப்பாவின் முகத்தில் இருந்து ரத்தம் வழிந்தோடியது. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் கங்காவதி போலீசில் புகார் அளித்தார். போலீசார், ஸ்ரீதரை கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு போக்குவரத்து ஊழியர்கள் கடும் எதிர்ப்பபு தெரிவித்து உள்ளனர்.