| ADDED : ஜூலை 12, 2024 07:00 AM
பெங்களூரு: 'மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், நடந்த முறைகேடு குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சாரியாவுக்கு, எத்னால் எழுதிய கடிதம்:'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேட்டில், முதல்வர் சித்தராமையாவின் மனைவியே பயன் அடைந்துள்ளார்.இதுகுறித்து, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நியாயமான, வெளிப்படையான விசாரணை நடக்கும் வகையில், விசாரணை மேற்பார்வையை உயர் நீதிமன்றம் ஏற்க வேண்டும். உங்களின் வழிகாட்டுதலில், நியாயத்தின் கை ஓங்கும். மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது.மைசூரின் விஜயநகரில் மூன்று மற்றும் நான்காம் கட்டத்தில், 3,000க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை சட்ட விரோதமாக வழங்கி உள்ளனர். முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, விஜயநகர் மூன்றாவது ஸ்டேஜில் 50க்கு 80 அடி உள்ள ஐந்து மனைகள், 60க்கு 40 அளவுள்ள மனைகள் உட்பட 14 மனைகளை சட்ட விரோதமாக வழங்கியுள்ளனர்.சித்தராமையா அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர், மூடா தொடர்பான அனைத்து கோப்புகளையும், பெங்களூருக்கு கொண்டு சென்றதாக, ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இது ஊழலை மூடி மறைக்கும் முயற்சியாகும். இது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.