பாட்னா, அரசு விழாவில் பங்கேற்ற பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், ''உங்கள் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன், வளர்ச்சி பணிகளை விரைவில் முடித்துக் கொடுங்கள்,'' என, ஐ.ஏ.எஸ்., அதிகாரியிடம் மேடையில் கெஞ்சிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. விமர்சனம்
இங்கு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட பாலங்கள் கடந்த ஒரு மாத காலத்தில் இடிந்து விழுந்தன. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, மாநில நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையைச் சேர்ந்த ஏராளமான மூத்த பொறியாளர்களை அரசு 'சஸ்பெண்ட்' செய்தது. இதற்கிடையே, பீஹார் தலைநகர் பாட்னாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, ஜே.பி., கங்கா விரைவுச் சாலையை மாநில அரசு அமைத்து வருகிறது. திகா - பாட்னா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வரையிலான முதற்கட்ட சாலைப் பணி முடிவடைந்து, 2022, ஜூன் மாதம் திறக்கப்பட்டது.பாட்னா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை - காய்காட் வரையிலான இரண்டாம் கட்ட சாலைப் பணி 2023, ஆகஸ்டில் திறக்கப்பட்டது.இந்நிலையில், காய்காட் - கங்கன்காட் வரையிலான 3.4 கி.மீ., விரைவுச்சாலை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதை முதல்வர் நிதீஷ் குமார் திறந்து வைத்தார்.அடுத்த கட்டமாக, கங்கன்காட் - அசோக் ராஜபாதை வரையிலான நான்காம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.இந்த விழாவில், நிதீஷுடன் சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவ், துணை முதல்வர்கள் வினய் குமார் சின்ஹா, சாம்ராட் சவுத்ரி, மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.சாலையை திறந்து வைத்த நிதீஷ் குமார், விழாவில் பங்கேற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கைகளை பிடித்துக் கொண்டு, ''தயவு செய்து வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடித்துக் கொடுங்கள், உங்கள் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்,'' எனக் கூறியபடி காலில் விழப்போனார். நம்பகத்தன்மை
பதறிப்போன ஐ.ஏ.எஸ்., அதிகாரி, 'சார், தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்' என, கூறி சட்டென்று விலகினார்.இதைப் பார்த்த அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் திகைத்து நின்றனர். இந்த காட்சிகளை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், 'ஆட்சியின் மீதான நம்பகத்தன்மை தொலைந்து, ஆட்சியாளருக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போகும்போது, கொள்கைகள், மனசாட்சியை ஒதுக்கிவைத்துவிட்டு, உயர்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரையில் அனைவரது காலிலும் தலைவணங்க வேண்டிய நிலை ஏற்படும்' என, தெரிவித்துள்ளார்.