பெலகாவி: ஹூப்பள்ளியில் நேஹா ஹிரேமத், அஞ்சலி அம்பிகேரா கொலையை தொடர்ந்து, பெலகாவியிலும் இளம்பெண்ணொருவர், கொலை மிரட்டலை எதிர்கொண்டுள்ளார்.ஹூப்பள்ளியில் காதலை ஏற்கவில்லை என்பதால், நேஹா, அஞ்சலி ஆகிய இரு இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டனர். அடுத்தடுத்து நடந்த கொலைகளால், பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.இந்த நிலையில், பெலகாவியில், இளம்பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெலகாவியின், கினே கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக இதே கிராமத்தில் வசிக்கும் திப்பண்ணா டோக்கரே, 27, தொந்தரவு கொடுக்கிறார்.மூன்று ஆண்டுகளாக பின்னால் சுற்றுகிறார். கல்லுாரிக்கு செல்லும் வழியில், பின் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். இவரது இம்சை தாங்காமல், கல்லுாரிக்குச் செல்வதையே நிறுத்திவிட்டு, இளம்பெண் வீட்டில் இருக்கிறார்.தன் காதலை ஏற்க மறுத்ததால், சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணின் வீட்டு கதவுக்கு, திப்பண்ணா தீ வைத்தார். மூன்று நாட்களுக்கு முன்பு பெண்ணின் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தபோது, வீட்டின் மீது கற்களை வீசி தாக்கினார். இதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுக்கின.இளம்பெண்ணின் வீட்டு அருகிலேயே, திப்பண்ணாவின் விளை நிலம் உள்ளது. இதையே காரணம் காட்டி, அவ்வப்போது பெண்ணின் வீட்டுக்கு வந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலவந்தப்படுத்தி வருகிறார். ''என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், ஹூப்பள்ளியில் இரண்டு பெண்களுக்கு நடந்த கதியே, உனக்கும் நடக்கும்,'' என, டோக்ரே மிரட்டியுள்ளார்.பீதியடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், பெலகாவி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.