உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளுக்கான உதவித்தொகை விடுவிப்பு பிரதமர் மோடியின் முதல் கையெழுத்து

விவசாயிகளுக்கான உதவித்தொகை விடுவிப்பு பிரதமர் மோடியின் முதல் கையெழுத்து

புதுடில்லி, விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும், 'பி.எம்., கிசான்' திட்டத்தின் கீழ், 17வது தவணையாக, 20,000 கோடி ரூபாய் வழங்குவதற்கான கோப்பில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று கையெழுத்திட்டார். மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின், தன் முதல் அதிகாரப்பூர்வ பணியாக இதை அவர் செய்தார்.விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பி.எம்., கிசான் திட்டம், 2019 பிப்.,ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய், மூன்று தவணைகளாக வழங்கப்படும்.

ஆதார் அடிப்படையில்

ஆதார் அடிப்படையில், அவர்களுடைய வங்கிக் கணக்கில் இந்தத் தொகை நேரடியாகச் செலுத்தப்படும். இதுவரை, 2.42 லட்சம் கோடி ரூபாய், 11 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றார். நேற்று தன் பொறுப்புகளை அவர் ஏற்றுக் கொண்டார். புதிய அரசின் முதல் உத்தரவாக, 9.3 கோடி விவசாயிகளுக்கு, 20,000 கோடி ரூபாய் வழங்கும் கோப்பில், அவர் கையெழுத்திட்டார்.இதைத் தொடர்ந்து அவர் கூறியுள்ளதாவது:இந்த அரசு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. அதனால், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் கோப்பில், முதல் கையெழுத்திடுவது மிகவும் சிறப்பானது. விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து உழைப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் விமர்சனம்

இதுகுறித்து, காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:ஏற்கனவே உள்ள திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்குவதை, ஏதோ புதிது போல் காட்டுகின்றனர். பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு எதாவது செய்ய நினைத்தால், உடனடியாக, வேளாண் விளைபொருட்களுக்கு, எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ உறுதி அளிக்க வேண்டும்.விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதுடன், பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 11, 2024 03:13

காங்கிரஸ் கேட்பது , எப்படியிருக்கு என்றால் விவசாயிகளை நசுக்கும் இடைத்தரகர்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் காரர்களே , ஒருபக்கம் MSP விவசாயிகளுக்கு உதவும் என்றால் இன்னொரு பக்கம் சாதாரண குடிமக்களின் வயிற்றில் அடிப்பது போல இருக்கும் , இருதலைக்கொள்ளி நிலை


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி