| ADDED : ஏப் 06, 2024 10:59 PM
பெங்களூரு: ''கர்நாடகாவில் தலித்துகள் வலுவடைந்துள்ளனர். எனவே லோக்சபா தேர்தல் காங்கிரசுக்கு சாதகமாக அமையலாம்,'' என, காங்கிரஸ் பிரச்சார கமிட்டி துணை தலைவர் ஹனுமந்தையா தெரிவித்தார்.இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நெருங்குவதால், கர்நாடகாவில் தலித் ஓட்டுகளை ஒருங்கிணைக்க திட்டம் வகுக்கப்படுகிறது. எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட கலபுரகி, விஜயபுரா, சித்ரதுர்கா, கோலார், சாம்ராஜ்நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது.மாநிலத்தின் 100க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில், தலித் பிரிவின் மாதிக சமுதாயத்தைச் சேர்ந்த 30,000 முதல் 40,000 வாக்காளர்கள் உள்ளனர். கோலாரில் தலித் தலைவர் முனியப்பா, முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் மோதல் ஏற்பட்ட பின், தலித்துகளின் ஒற்றுமைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.கட்சிக்காக அனைவரும் பணியாற்றுவதை உறுதிப்படுத்த, கூட்டம் நடத்த வேண்டும். சிறு, சிறு பிரச்னைகள் சரி செய்யப்படும். தலித் ஓட்டுகளை ஒருங்கிணைக்க முயற்சிக்க வேண்டும். இந்த முயற்சி எதிர்பார்த்த அளவில் நடக்கவில்லை.கர்நாடகாவில் தலித்துகள் வலுவடைந்துள்ளனர். இது லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு வரப்பிரசாதமாக அமையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.