அமைச்சர்கள் ஆப்சென்ட் ஆனதால் விரக்தி; சட்டசபையில் பா.ஜ.,வினர் வெளிநடப்பு
பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு அமைச்சர்கள் வராததை கண்டித்து, பா.ஜ.,வினர் வெளிநடப்பு செய்தனர்.கர்நாடக சட்டசபை நேற்று காலை 10:30 மணிக்கு கூடிய போது, பல அமைச்சர்கள் அவைக்கு வரவில்லை. இதனால், பல இருக்கைகள் காலியாக உள்ளன.அப்போது நடந்த விவாதம்:* எதிர்க்கட்சி தலைவர் அசோக்: ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில், முதல் வரிசை, இரண்டாம் வரிசையில் அமைச்சர்கள் இருக்கைகளில் இல்லை. சட்டசபைக்கு முதல்வர் வரவில்லை. காலை 10:00 மணிக்கு கூட்டம் ஆரம்பிப்பதாக சபாநாயகர் நேரம் நிர்ணயம் செய்தார். ஆனால், 10:30 மணிக்கு ஆரம்பித்தும், முதல்வர், அமைச்சர்கள் வரவில்லை. கூட்டத்தை ஒத்தி வையுங்கள்.(அப்போது, எதிர்க்கட்சியினர் எழுந்து நின்று, ஆளுங்கட்சியின் முதல் வரிசையில் 'ஜீரோ', 'ஜீரோ' என்று கோஷம் எழுப்பினர்)* ஆளுங்கட்சி கொறடா அசோக் பட்டன்: நான்கு அமைச்சர்கள் வந்துள்ளனர். சில அமைச்சர்கள் மேலவையில் உள்ளனர்.* சபாநாயகர் காதர்: உங்கள் கதை கேட்க இங்கு வரவில்லை. தலைமை கொறடாவாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.* அசோக் பட்டன்: முதல்வர் உத்தரவின்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும், 'விப்' எனும் கொறடா உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.* சபாநாயகர்: கூட்டத்தொடர் நடக்கும் போது, அமைச்சர்கள் கட்டாயமாக ஆஜராக இருக்க வேண்டும். மற்ற கூட்டங்கள், நிகழ்ச்சிகளை கூட்டத்தொடர் நேரத்தில் வைத்து கொள்ள கூடாது. ஆட்சி துவங்கி ஓராண்டாகிறது. நானும் பலமுறை சொல்லி விட்டேன். ஆனாலும், மீண்டும் மீண்டும் அப்படியே செய்கிறீர்கள்.* பா.ஜ., - பசனகவுடா பாட்டீல் எத்னால்: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் செய்த முறைகேடு பணத்தால், மது பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளன என்று அமலாக்கத் துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. முதல்வரே இல்லை என்றால், யாருடன் பேசுவது. இந்த அரசுக்கு பொறுப்பு இல்லை. தகுதி இல்லை. ஆளுங்கட்சியின் செயல்பாடு கண்டித்தக்கது.* எதிர்க்கட்சி தலைவர்: சபாநாயகருக்கு எங்கள் மீது அனுதாபம் இல்லை. சட்டசபைக்கு வராத அளவுக்கு அமைச்சர்களுக்கு என்ன வேலை. அமைச்சர்கள் வராததை கண்டித்து, வெளிநடப்பு செய்கிறோம்.(அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி கொண்டே பா.ஜ.,வினர் வெளியே சென்றனர்)பாக்ஸ்...-------மேலவை தலைவர் எச்சரிக்கைகர்நாடக மேலவை கூட்டம், நேற்று காலை துவங்கிய போது, ஆளுங்கட்சி வரிசையில் அமைச்சர்கள், அதிகாரிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பா.ஜ., உறுப்பினர் பிரதாப் சிம்ஹா நாயக், சுற்றுலா துறை தொடர்பான கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க சபையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் இருக்கவில்லை.* பா.ஜ., - பிரதாப் சிம்ஹா நாயக்: சபையில் அமைச்சர் இல்லையென்றால், நாங்கள் யாரிடம் கேள்வி எழுப்புவது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் இல்லை; துறை அதிகாரிகளும் இல்லை.* ம.ஜ.த., - போஜேகவுடா: சபை நடக்கும் போது அமைச்சர்கள், அதிகாரிகள் கட்டாயமாக ஆஜராக வேண்டும். இதற்கு முன்பும் நீங்கள் (மேலவை தலைவர்) அரசை எச்சரித்தீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பில்லை என்றால் எப்படி.* மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: சபையில் இன்று ஹெச்.கேபாட்டீல், சுதாகர், சரண பசப்பா தர்சனாபுர், ஜமீர் அகமது கான் உட்பட பல அமைச்சர்கள் இருந்திருக்க வேண்டும். துறை அதிகாரிகளும் ஆஜராகியிருக்க வேண்டும்.* ம.ஜ.த., - போஜேகவுடா: உங்களின் எச்சரிக்கைக்கு பின்னரும், அமைச்சர்கள், அதிகாரிகள் வராவிட்டால் எப்படி. உங்கள் பேச்சுக்கும் மதிப்பில்லையா.* பசவராஜ் ஹொரட்டி: நானும் பல முறை உத்தரவிட்டேன். இன்னும் எத்தனை முறை தான், அரசுக்கு சொல்வது. ஆளுங்கட்சி தலைவர், இனி இதுபோன்று நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். நான் அவ்வப்போது எச்சரிப்பது சரியல்ல.இவ்வாறு விவாதம் நடந்தது.***