உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்

ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்

பெலகாவி: சர்வதேச தாய் மொழி தினமான நேற்று, கன்னடத்தில் பேசிய அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய மர்ம நபர்கள், 'மராத்தியில் பேசு' என்று கூறி விட்டு தப்பியோடினர்.பெலகாவியில் இருந்து சுலேபாவிக்கு நேற்று காலை கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சென்றது. வழியில் ஆணும், பெண்ணும் ஏறினர். பெண்ணுக்கு இலவச பயணம். அதனால் உடன் வந்த நபரிடம் நடத்துநர் டிக்கெட் கேட்டுள்ளார்.

திட்டிய பயணி

இதனால் கோபமடைந்த அந்நபர், நடத்துனரை திட்டியுள்ளார். யாருக்கோ போன் மூலம் தகவல் கொடுத்தார். அந்நபர் இறங்கும் நிறுத்தம் வருவதற்கு முன்பே, 20க்கும் மேற்பட்டோர் பஸ்சில் ஏறினர்.நடத்துநர் மஹாதேவப்பா மாலப்பா ஹுக்கேரி, ஓட்டுநர் காடல் சாப் மோமின் ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு பஸ்சிலிருந்து குதித்து தப்பியோடினர். காயமடைந்த இருவரும், மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இச்சம்பவம் தொடர்பா நடத்துனர் மஹாதேவப்பா மாலப்பா ஹுக்கேரி கூறியதாவது:பாலேகுந்த்ரியில் ஏறிய ஆணும், பெண்ணும், சி.பி.டி., என்ற பகுதிக்கு செல்ல வேண்டும் என்றனர்.பெண்களுக்கு இலவசம் என்பதால் அப்பெண்ணுக்கு 'ஜீரோ' டிக்கெட் கொடுத்தேன். உடன் வந்த நபர், டிக்கெட் எடுத்து விட்டேன் என்றார். அருகில் இருந்த பயணியர், அவர் டிக்கெட் எடுக்கவில்லை என்றனர்.இருவருக்கும் 'ஜீரோ' டிக்கெட் தர முடியாது. கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொள் என்றேன். அதற்கு அந்நபர், கன்னடத்தில் பேசாதே... மராத்தியில் பேசு என்றார். எனக்கு மராத்தி தெரியாது என்றேன். தெரியவில்லை என்றால் கற்றுக் கொள் என்றார்.

20 பேர் தாக்குதல்

இதற்கிடையில் மொபைல் போன் மூலம் அவரது நண்பர்கள், கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் சாலையை மறித்து நின்று கொண்டனர். 20க்கும் மேற்பட்டோர் பஸ்சுக்குள் ஏறி, என்னையும், ஓட்டுநரையும் தாக்கினர்.இவ்வாறு அழுதபடியே அவர் கூறினார்.தகவல் அறிந்த டி.சி.பி., ரோஹன் ஜெகதீஷ், ஓட்டுநர், நடத்துநரிடம் விசாரித்து, விபரம் கேட்டறிந்தார்.பின், அவர் அளித்த பேட்டி:கன்னடம் பேசியதால், தாக்கப்பட்டதாக நடத்துனர் கூறியுள்ளார். அவரின் வாக்குமூலத்தின்படி, மரிஹாலா போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை தாக்கியவர்களை கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.சம்பவத்தை போலீசார் தடுக்காமல் சமாதானம் செய்ய முயற்சித்ததாக, ஓட்டுநர் கூறி உள்ளார். இந்த வீடியோ, போலீஸ் கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை