பெங்களூரு : 'கன்னடர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காவிட்டால், வரலாறு உங்களை மன்னிக்காது' என்று, தனது முன்னாள் குருவான தேவகவுடாவுக்கு முதல்வர் சித்தராமையா பாடம் எடுத்துள்ளார்.முதல்வர் சித்தராமையாவின் 'எக்ஸ்' சமூக வலைதள பதிவு:மாநிலத்தின் 6 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள முதல்வர், 100 கோடி மக்களின் பிரதிநிதியான பிரதமரை பார்த்து கேள்வி கேட்க கூடாது என்று, தேவகவுடா கூறியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் அவருக்காக நான் வருத்தப்படுகிறேன்.இத்தனை ஆண்டுகள் ஒரு மாநில கட்சியை வழிநடத்திய தேவகவுடா, மத்திய அரசையும், பிரதமரையும் விமர்சித்து பேசினார். ஆனால், இந்த வயதில் சரணாகதி அடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்.பிரதமரும், முதல்வரும் மன்னர்கள் அல்ல. இருவரும் தங்கள் அந்தஸ்தில் சமம். ராஜிவ் பிரதமரான போது அவரை விட, மாநில முதல்வர்கள் சிலர் வயதில் மூத்தவர்களாக இருந்தனர். அப்போதும் அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. முந்தைய பிரதமர்களை தேவகவுடா எப்படி எல்லாம் திட்டினார். என்னென்ன கேள்வி கேட்டார் என்ற பட்டியலை, என்னால் கொடுகக முடியும். நள்ளிரவு விவாதம்
கடந்த 2002 குஜராத் கலவரத்தின் போது, பார்லிமென்டில் நள்ளிரவு வரை விவாதம் நடந்தது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு எதிராக, தேவகவுடா பயன்படுத்திய வார்த்தைகள், சபை பதிவில் இருக்கலாம். அப்போது இந்த 100 கோடி, 6 கோடி வேறுபாடுகள் தெரியவில்லையா. பிரதமர் மோடியை விட ஒன்பது வயது குறைவாக இருக்கும் தேவகவுடாவின் மகன் குமாரசாமி, பிரதமரை பற்றி பேசிய வார்த்தைகளை, நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.அப்போது, 100 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமரை விமர்சித்து பேச கூடாது என்று, உங்கள் மகனிடம் ஏன் சொல்லவில்லை. மாநிலத்திற்கு அநீதி நடக்கும் போது மத்திய அரசையும், பிரதமரையும் கேள்வி கேட்கும் உரிமை, அனைவருக்கும் உண்டு.மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, குஜராத் முதல்வராக இருந்த மோடி பேசிய வார்த்தைகள், உங்களுக்கு நினைவில் இருக்கலாம் என்று நினைக்கிறேன். திருந்துங்கள்
தேவகவுடா நாட்டின் பிரதமராக இருந்த போது, கன்னடர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாநிலத்தின் நிலம், நீர், மொழி பாதுகாப்புக்காக நீங்கள் நடத்திய போராட்டத்தை பார்த்து, கன்னடர்கள் உங்களை கொண்டாடினர். ஆனால் உங்கள் கட்சியை மக்கள் ஆதரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து உள்ளீர்கள்.கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அநியாயம் நடக்கும் போது, நீங்கள் தான் முதல் ஆளாக, குரல் கொடுத்திருக்க வேண்டும். இப்போது பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு, அவர்கள் சார்பாக எங்களுக்கு எதிராக, வாள் வீசுவது வருத்தம் அளிக்கிறது. இன்னும் நேரம் உள்ளது. உங்கள் தவறை திருத்தி கொள்ளுங்கள்.கன்னடர்களுக்கு மத்திய அரசு இழைத்துள்ள அநீதியை எதிர்த்து குரல் எழுப்புங்கள். அப்படி செய்யவில்லை என்றால், உங்கள் கட்சிக்கு சிறிது காலம் நன்மை கிடைக்கலாம். ஆனால், வரலாறு கண்டிப்பாக உங்களைமன்னிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.