உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போனது கண் பார்வை; போகவில்லை நம்பிக்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணி பெண் கேப்டன் வர்ஷா அசத்தல்

போனது கண் பார்வை; போகவில்லை நம்பிக்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணி பெண் கேப்டன் வர்ஷா அசத்தல்

பொதுவாக நல்ல உடல்வாகு கொண்டவர்களை விட, மாற்று திறனாளிகளுக்கு எப்போதும் நம்பிக்கை அதிகம். வாழ்க்கையில் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும் என்ற, லட்சிய தாகம் அவர்கள் மனதிற்குள் இருக்கும். அதற்கான வாய்ப்பு கிடைத்து விட்டால், தாங்கள் யார் என்பதை உலகிற்கு நிரூபித்து காட்டி விடுவர். இரண்டு கண் பார்வையும் பறிபோன நிலையில், கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார் கர்நாடக பெண். அதுவும் பார்வையற்றோர் கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டனாக சாதிக்கிறார்.

கிரிக்கெட் மீது ஆர்வம்

சித்ரதுர்காவின் ஹிரியூர் ஆதிவாலா கிராமத்தை சேர்ந்தவர் வர்ஷா, 28. இவருக்கு 17 வயது வரை கண்பார்வை நன்றாக இருந்தது. அதன் பின்னர் இரண்டு கண் பார்வையிலும் குறைபாடு ஏற்பட்டது. பெங்களூரில் உள்ள கண் மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்த போது, என்ன காரணத்திற்காக பார்வையில் குறைபாடு ஏற்பட்டது என்று, டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.அடுத்த சில நாட்களில், வர்ஷாவின் இரு கண் பார்வையும் பறிபோனது. கல்லுாரி படிப்பை முடித்த அவர், பெங்களூருக்கு வேலை தேடி வந்தார். தனியார் தங்கும் விடுதியில் தங்கினார். வர்ஷாவுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் இருப்பது பற்றி அறிந்த, தங்கும் விடுதி தோழி ஒருவர், வர்ஷாவிடம், 'நீங்கள் ஏன் பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பங்கேற்ற கூடாது' என்று கேட்டு உள்ளார்.

கேப்டன் பதவி

முதலில் தயங்கிய வர்ஷா, தோழி உதவியுடன் பார்வையற்றோர் கிரிக்கெட் அகாடமிக்கு, கடந்த 2019ல் முதல்முறையாக பயிற்சிக்கு சென்றார். அங்கு அளித்த பயிற்சியின் மூலம், கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது. பயிற்சியில் முழு கவனம் செலுத்திய வர்ஷா, பேட்டிங்கில் ஜொலிக்க ஆரம்பித்தார். பின்னர் கர்நாடக பெண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில், அவருக்கு இடம் கிடைத்தது.சிறப்பாக செயல்பட்டதால் வர்ஷாவுக்கு கேப்டன் பதவி தேடி வந்தது. தொடர்ந்து அவர் மேலும் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தார்.இந்நிலையில் கடந்த ஆண்டு இங்கிலாந்து பிர்மிங்காமில் நடந்த, பெண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு வர்ஷாவை தேடி வந்தது. இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இந்தியா வெற்றி பெற்று தங்கம் வென்றது.

பி.சி.சி.ஐ., உதவி

இதுகுறித்து வர்ஷா கூறியதாவது:அரசு அதிகாரியாக வர வேண்டும் என்ற ஆசை, எனக்கு சிறிய வயதில் இருந்தது. ஆனால் திடீரென கண்பார்வை பறிபோனதும், இனி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று பயந்தேன். ஆனாலும் என் பெற்றோர், உறவினர்கள் என்னை ஊக்கப்படுத்தினர். தோழி ஒருவர் மூலம், கிரிக்கெட் பயணத்தில் சேர்ந்தேன். கர்நாடக பெண் அணியை வழிநடத்தினேன்.இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு வந்த போது, முதலில் தயக்கமாக இருந்தது. பயிற்சியாளர்கள் ஊக்குவித்தனர். எங்களை போன்ற கிரிக்கெட் வீராங்கனை யருக்கு, பி.சி.சி.ஐ., நிறைய உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கம் வென்றது, எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். கண் பார்வை பறிபோனதை நினைத்து, இப்போது எனக்கு வருத்தம் இல்லை. பார்வை தான் பறிபோனது, என் நம்பிக்கை பறிபோகவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ