| ADDED : ஜூலை 11, 2024 01:18 AM
திருவனந்தபுரம் :'வேந்தரின் உத்தரவுக்கு எதிரான வழக்குகளை பல்கலை துணைவேந்தர்களும், அதிகாரிகளும் சொந்த செலவிலேயே மேற்கொள்ள வேண்டும்' என, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் உள்ள பல்கலைகளுக்கு வேந்தராக அந்த மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் உள்ளார்.சொந்த நலன்இவருக்கு எதிராக பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் அதிகாரிகளால் தொடரப்பட்ட வழக்குகளுக்கு, சம்பந்தப்பட்ட பல்கலைகள் லட்சக்கணக்கில் செலவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், வேந்தரான கவர்னர் ஆரிப் முகமது கான், அனைத்து பல்கலைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:மாநிலத்தில் உள்ள பல்கலைகளுக்கு வேந்தராக நான் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அந்தந்த பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் அதிகாரிகளால் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதற்கான செலவுகள் அந்தந்த பல்கலை வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன.இந்த விவகாரத்தில் பல்கலை நிதியை தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு செய்வதால், சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் தனிப்பட்ட நலனை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆகையால், இனிமேல் பல்கலை மற்றும் வேந்தருக்கு எதிரான வழக்குகளை மேற்கொள்ள பல்கலை நிதியை பயன்படுத்தக் கூடாது. சம்பந்தப்பட்ட துணைவேந்தர்கள் மற்றும் அதிகாரிகளே அதற்கான செலவை மேற்கொள்ள வேண்டும். இதை, அனைத்து பல்கலைகளும் உறுதி செய்ய வேண்டும். மீண்டும் வசூல்அவ்வாறு ஏதாவது தொகை கொடுக்கப்பட்டிருந்தால், யாருடைய சார்பாக அந்த தொகை செலுத்தப்பட்டுள்ளதோ, அவரிடம் இருந்து உடனடியாக அது திரும்ப பெறப்படும். இது தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை, பணத்தை திரும்ப பெறுவது தொடர்பான தற்போதைய நிலை ஆகிய விபரங்களை, வேந்தர் அலுவலகத்துக்கு பல்கலைகள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.