லோக்சபா தேர்தல் நேரம் என்பதால், தனியார் சர்வே நடக்கிறது. தினமும் மொபைல் போனில் அழைப்பு, மெசேஜ் வருவதால் மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர்.கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக, லோக்சபா தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. ஏப்ரல் 26 மற்றும் மே 7ல் ஓட்டு பதிவு நடக்கிறது. ஆளுங்கட்சியான பா.ஜ., எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., உட்பட மற்ற கட்சிகள் தயாராகின்றன. சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தொடர் கேள்விகள்
இதற்கிடையில் தனியார் நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள், அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வருவது யார் என்பதை தெரிந்து கொள்ள, சர்வே நடத்துகின்றன. மக்களை தொடர்பு கொண்டு, எந்த கட்சிக்கு, வேட்பாளருக்கு ஓட்டு போடுவீர்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளை கேட்கின்றனர்.தினமும் ஒரு அமைப்பு அல்லது நிறுவனத்தின் ஊழியர்கள், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'நாங்கள் சர்வே நடத்துகிறோம். உங்கள் ஓட்டு யாருக்கு, கடந்த முறை யாருக்கு ஓட்டு போட்டீர்கள், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என, விரும்புகிறீர்கள் என்பது உட்பட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி பதில் பெறுகின்றனர்.இத்தகைய கேள்விகளுக்கு பதிலளித்து, வாக்காளர்கள் சோர்வடைந்துள்ளனர். தேசிய கட்சிகளுடன், சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி, சுயேச்சை வேட்பாளர்களும், தங்கள் தொகுதி மக்களின் நாடித்துடிப்பை தெரிந்து கொள்ளும் நோக்கில், தனியார் ஏஜன்சிகள் மூலமாக சர்வே நடத்துகின்றனர். வேட்பாளரிடம் அறிக்கை
ஏஜன்சிகளும் ரகசியமாக சர்வே நடத்தி வேட்பாளர்களிடம் அறிக்கை அளித்துள்ளனர். இதில் உள்ள அம்சங்களின் அடிப்படையில், பிரசார திட்டங்கள் வகுக்கின்றனர். எந்த இடத்தில் அதிகமான பிரசாரம் செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிடுகின்றனர்.லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான பின், வேட்பாளர்கள் தங்கள் சொந்த செலவில், ஆய்வு நடத்துகின்றனர். யாருக்கு, எந்த கட்சிக்கு சாதகமான அலை உள்ளது என்பதை தெரிந்து கொள்கின்றனர். பிரசாரத்துக்கு முன்பே வாக்காளர்களின் மனதில் உள்ளதை தெரிந்து கொள்கின்றனர்.ஆய்வு நடத்தவே பல ஏஜன்சிகள் உள்ளன. சில ஏஜன்சியினரை வேட்பாளர்களே தேடி செல்கின்றனர். சில ஏஜன்சிகள், அந்தந்த வேட்பாளரை சந்தித்து ஆய்வு நடத்தும் பொறுப்பை தங்களிடம் தரும்படி கேட்டு, ஆய்வு நடத்துகின்றனர். தேர்தல் வந்தால் இத்தகைய ஏஜன்சிகளுக்கு கொண்டாட்டம் தான். மக்கள் எரிச்சல்
ஒவ்வொரு தொகுதி வாக்காளர்களின் மொபைல் எண்களை சேகரிக்கும், ஏஜன்சி ஊழியர்கள், வாக்காளர்களை தொடர்பு கொண்டு, பல கேள்விகளை கேட்டு பதில் பெறுகின்றனர். ஆய்வு பெயரில் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்து, தொந்தரவு கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அடுக்கடுக்கான கேள்விகள் கேட்பதால், மக்கள் எரிச்சல் அடைகின்றனர். போன் அடித்தால் எடுக்கவே தயங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பணியில் ஈடுபட்டுள்ள நேரத்தில், இப்படி போன் செய்வது சரியா என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர்- நமது நிருபர் -.