துமகூரு மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை
துமகூரு : துமகூரு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கர்நாடகாவில், சிறிய இடைவெளிக்கு பின், தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த மாதம் கடலோர பகுதிகளில் கன மழை பெய்தது. தற்போது அப்பகுதிகளில் மழை சற்று ஓய்ந்து உள்ள நிலையில், பெங்களூரு, துமகூரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம்
நேற்று முன்தினம் இரவு துமகூரின் கொரட்டகெரே, மதுகிரி, குப்பி உள்ளிட்ட தாலுகாக்களில் கனமழை பெய்தது. இரவு முதல் காலை வரை விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஜெயமங்கலி, சுவர்ணமுகி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.கொரட்டகெரே டவுனில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இரவு முழுதும் தூக்கம் இன்றி தவித்தனர். நேற்று காலை மழை நின்ற பின், வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் பிடித்து வெளியேஊற்றினர்.பல்லாரியின் கம்பிளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், தேவலாபுரம் கிராமத்தின் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. கம்பிளி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்தது. சிறுகுப்பா தாலுகாவில் பெய்த கனமழையால் ராராவி கிராமத்தின் எல்லம்மா ஓடை நிரம்பி வழிந்தது. இதனால் போலீஸ் நிலையம், போலீஸ் குடியிருப்பு வளாகம், பழைய தாசில்தார் அலுவலகம், மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்து நெரிசல்
பெங்களூரில் நேற்று மாலை 4:00 மணிக்கு மழை பெய்தது. பீன்யா, நாகசந்திரா, ஹெசருகட்டா பகுதிகளில் பெய்த கனமழையால், சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. பெங்களூரு -- துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராஜாஜிநகர், சிவாஜி நகர், மெஜஸ்டிக், பசவேஸ்வரா நகர், விஜயநகர், மாகடி ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.வடமாவட்டமான ராய்ச்சூரின் மஸ்கி தாலுகா மரலதின்னி கிராமத்தில் உள்ள, மஸ்கி அணை நிரம்பியது. அணையில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மஸ்கி தாசில்தார் மல்லப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாற்று திறனாளி
சிக்கமகளூரு கடூர் சிக்க லங்கா கிராமத்தில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில், கோபால், 65 என்ற மாற்று திறனாளி உயிரிழந்தார். சித்ரதுர்காவின் ஹிரியூர் தாலுகாவில் ஆலுாரு கிராமத்தில் மழைக்கு எட்டு வீடுகள் இடிந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.