உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியை புரட்டிப்போட்ட பலத்த மழை: போக்குவரத்து நெரிசலால் திணறல்

டில்லியை புரட்டிப்போட்ட பலத்த மழை: போக்குவரத்து நெரிசலால் திணறல்

புதுடில்லி: டில்லியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய கொட்டிய கனமழையால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின. சுரங்கப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், ஏராளமான வாகனங்கள் சிக்கியதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டில்லியில் கடந்த இரு ஆண்டுகளாக இல்லாத அளவு வாட்டி வதைத்த வெயிலால், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முழுதும் டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இதையடுத்து, நள்ளிரவு துவங்கி, நேற்று காலை வரை டில்லி, நொய்டா, குருகிராம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டியது.

கடும் அவதி

இடைவிடாது கொட்டிய மழையால் டில்லியின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின. இதனால், ரயில்வே பாலங்கள், சுரங்கப் பாதைகள், குடியிருப்புகள் நீரில் மூழ்கின.அதிகாலையில் வேலைக்கு வாகனங்களில் சென்றவர்கள் ஆங்காங்கே தேங்கியிருந்த வெள்ளத்தில் சிக்கி கடும் அவதிக்கு ஆளாகினர். ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு செல்லும் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், கார் உள்ளிட்ட வாகனங்கள் தத்தளித்தபடி ஊர்ந்து சென்றன.இதனால், பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை மழை நீரில் சிக்கி ஆங்காங்கே பழுதாகி நின்றன. மண்டி ஹவுசுக்கு செல்லும் ஹனுமன் கோவில் சந்திப்பு மூன்றடி தண்ணீருக்கு அடியில் மூழ்கியது. அசோகா சாலை, பெரோஸ் ஷா சாலை, கன்னாட் பிளேஸ் ஆகிய இடங்களில் மழை வெள்ளம் காரணமாக இணைப்பு சாலைகள் மூடப்பட்டன. மின்டோ ரோடு சுரங்க பாலத்தில் சிக்கிய கார் ஒன்று சில நிமிடங்களில் நீரில் மூழ்கியது. முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டதை அடுத்து, போக்குவரத்து நெரிசல் படிப்படியாக குறைந்தது. மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் புகுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு, ஒரு சில நிலையங்கள் மூடப்பட்டன. தண்ணீர் வடிந்ததை தொடர்ந்து, மதியத்துக்கு பின் செயல்படத் துவங்கின.

பேரிடர் மீட்புக் குழு

டில்லியின் வசந்த் விஹார் பகுதியில் கட்டப்பட்டு வந்த புதிய கட்டடத்தின் சுவர் பகுதி இடிந்து விழுந்தது. அங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியதை அடுத்து, அவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். ஹரி நகர், லோதி காலனி, பிகாஜி காமா ப்ளேஸ் உட்பட பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் மூழ்கின. பல இடங்களில், பாதசாரிகள் இடுப்பளவு தண்ணீரில் நீந்தியபடி சென்றனர். சூறைக்காற்றுடன் பெய்த மழையால் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டில்லியை அடுத்த குருகிராமில் உள்ள துவாரகா எக்ஸ்பிரஸ்வே, செக்டர் 9, செக்டர் 21, செக்டர் 23 உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சிக்கிய பஸ்

கனமழை காரணமாக டில்லி ரயில் நிலைய சந்திப்பு மற்றும் காஷ்மீர் கேட் பகுதிகளை இணைக்கும் கோடியா பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. அதிகாலையில் இந்த சுரங்கப் பாலத்தை கடந்த பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதை அடுத்து அதிலிருந்த பயணியர் அதிர்ச்சிக்குஉள்ளாகினர். இரண்டு மணி நேரமாக வெள்ளத்தில் சிக்கிய பஸ்சை, பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி வெளியே இழுத்தனர். லைப் ஜாக்கெட் உதவியுடன் மீட்கப்பட்ட பயணியர் மாற்று பஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை