| ADDED : மே 09, 2024 02:28 AM
புதுடில்லி:தலைநகர் டில்லியில், பழைய 'ஏசி' இயந்திரங்களை 63 சதவீதம் வரை தள்ளுபடியுடன் பரிமாறிக்கொள்ளும் திட்டத்தை மின்சார வினியோக நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.தலைநகர் டில்லியில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸை எட்டியுள்ள நிலையில், இந்த ஆண்டு கோடை காலம் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டு கோடைகாலத்திலும் 'ஏசி' பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால், டில்லிவாசிகளின் மின் கட்டணமும் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எனவே, பழைய 'ஏசி' இயந்திரங்களைப் பயன்படுத்துவோர் 5- நட்சத்திர ஆற்றல் திறன் கொண்ட 'ஏசி' இயந்திரங்களுக்கு மாறினால் மின் கட்டண செலவைக் கணிசமாகக் குறைக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், டில்லியில் மின் வினியோகம் செய்துவரும் ராஜ்தானி பவர் லிமிடெட் மற்றும் யமுனா பவர் லிமிடெட் ஆகியவை, முன்னணி 'ஏசி' இயந்திர தயாரிப்பாளர்களுடன் இணைந்து 'ஏசி' இயந்திரங்களை மாற்றிக் கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.இந்த திட்டத்தில் பழைய 'ஏசி' இயந்திரத்துக்குப் பதிலாக புதிய மற்றும் ஆற்றல் திறன் கொண்ட 5- ஸ்டார் ஏசி இயந்திரம், அடுத்த தலைமுறை இன்வெர்ட்டர் தொழில்நுட்ப ஏசி இயந்திரம் ஆகியவற்றை 63 சதவீதம் வரை தள்ளுபடியில் மாற்றிக் கொள்ளலாம். இத்திட்டத்தில், முன்னணி ஏசி இயந்திர தயாரிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 3 ஏசி இயந்திரங்களை மாற்றிக் கொள்ளலாம்.