புதுடில்லி : ''பல்வேறு பகுதிகளில் போர் நடக்கும் நிலையில், இந்த உலகுக்கு அஹிம்சை, அமைதியின் பாதையை இந்தியா காட்டியுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.ஜெயின் சமூகத்தினரின் ஆன்மிக குருக்களான தீர்த்தங்கரர்களில், 24வது தீர்த்தங்கரரான பகவான் மகாவீரின், 2,550 ஜெயந்தியை முன்னிட்டு, புதுடில்லியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில், ஜெயின் சமூக ஆன்மிக குருக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு தபால் தலை, நாணயத்தை வெளியிட்டு, ஜெயின் குருக்களின் ஆசியை பெற்றார் பிரதமர் மோடி. நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:பகவான் மகாவீர் உட்பட ஜெயின் தீர்த்தங்கரர்கள் அமைதி, அஹிம்சை உள்ளிட்டவற்றை நமக்கு போதித்தனர்.உண்மையின் பாதைஇத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும், அவர்களை நினைவுகூர்வது, நம் பாரம்பரியத்தை மதிப்பது சிறப்பாகும். இன்னும, 1,000 ஆண்டுகளுக்கு மேலாகவும், அவர்களது போதனைகள் நம்மை வழி நடத்திச் செல்லும்.உண்மையின் பாதையில் செல்வது, வன்முறை இல்லாமல் இருப்பது ஆகிய அந்த போதனைகள், தற்போது உலகின் பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதாக அமைந்துள்ளன.இதனால் தான், பிளவுபட்டுள்ள இந்த உலகம், இந்தியாவை உலகின் உறவாக நம்பிக்கையுடன் பார்க்கிறது. இங்கு, நம் கலாசார பாரம்பரியங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.கடந்த 2014ல் நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது மக்கள் ஏமாற்றத்தில், விரக்தியில் இருந்தனர். அவற்றை நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட அதே நேரத்தில், நம் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தையும் முன்னிறுத்தினோம்.நம் நாட்டின் ஆன்மிக, பாரம்பரிய, கலாசார நடைமுறைகள் பல பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதாக உள்ளன. அதை மக்களும் ஏற்றுக் கொண்டனர். யோகா, ஆயுர்வேதம் என, நம் பாரம்பரியங்களை நாட்டின் புதிய தலைமுறைகளுக்கு எடுத்துக் கூறினோம். அதை தங்களுடைய பெருமையின் அடையாளமாக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.புதிய இந்தியாநம் இளைஞர்கள், சரியான திசை நோக்கி பயணிக்கின்றனர். நம் நாட்டின் பாரம்பரியத்தை, கலாசாரத்தை அவர்கள் பல நுாற்றாண்டுகளுக்கு எடுத்துச் செல்வர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.புதிய இந்தியாவில், நம் திறன்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதையெல்லாம்விட, நம் கலாசாரம் முக்கிய பங்காற்றுகிறது. உண்மை, அஹிம்சை, முழு ஒத்துழைப்பு ஆகிய கோட்பாடுகள், உலக அளவில் நமக்கு தனி இடத்தை தேடித் தந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
சோனியா மீது மறைமுக தாக்கு
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி, 400 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது, 300 தொகுதிகளில் கூட அந்த கட்சியால் வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. அந்த கட்சி செய்த பாவத்துக்கு, மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்களால் நேரடியாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற முடியவில்லை. அதனால் தான், ராஜ்யசபா வழியாக பார்லிமென்டிற்குள் நுழைகின்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். இப்போது அவரை தேர்வு செய்யாமல், மற்றொரு தலைவரை ராஜ்யசபாவுக்கு ராஜஸ்தானிலிருந்து தேர்வு செய்யப்பட்டு பார்லிமென்டிற்கு அனுப்பியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, சமீபத்தில் ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். அதைத் தான், பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.