பெங்களூரு : ரசிகரை கொன்ற வழக்கில், நடிகர் தர்ஷன் உள்ளிட்டோரை சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் நேற்று நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில், தர்ஷனுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, சித்ரதுர்காவில் நேற்று பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், பிரபல கன்னட நடிகர் தர்ஷன், 47. இவரது தோழி, பவித்ராகவுடா, 34, உட்பட 13 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால், ரேணுகாசாமியை கொன்றது முதல் கட்ட விசாரணையில் உறுதியானது. இவர்களை, ஆறு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். இரவில் போலீஸ் நிலையத்திலேயே இருந்தனர். நள்ளிரவு வரை தர்ஷன் துாங்கவில்லை. 'தலை வலிக்கிறது, டோலோ 650 மாத்திரை கொடுங்கள்' என்று கேட்டு சாப்பிட்டாராம்.நேற்று காலை மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பவித்ராவுக்கு தன் மர்ம உறுப்பை படம் எடுத்து, ரேணுகாசாமி அனுப்பியதாகவும், அதில், தர்ஷனை ஒப்பிட்டு தகாத வார்த்தையால் குறிப்பிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.இதற்கிடையில், நேற்று தர்ஷன் உட்பட அனைவரையும், கொலை நடந்த பட்டணகெரே ஷெட்டிற்கு போலீசார் அழைத்து சென்று, கொலை செய்தது எப்படி என்பதை நடித்து காட்டி, வீடியோவில் பதிவு செய்தனர். இதையறிந்த பலரும் அப்பகுதியை சூழ்ந்தனர். தர்ஷனை பார்க்க ஓடி வந்த அவரது ரசிகர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.அங்கு விசாரணை நடத்தி கொண்டிருக்கும் போது, பவித்ரா கண்ணீர் விட்டு அழுதார். இதே வேளையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெரிய இரும்பு தடி சிக்கியது. அதை தடயவியல் நிபுணர்கள் பறிமுதல் செய்தனர். அப்போது, தனக்கு கை, கால்கள் நடுங்குகிறது, சிகரெட் வாங்கி தரும்படி போலீசாரிடம் தர்ஷன் கேட்டுள்ளார். போலீசார் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பின், அங்கிருந்து மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. போராட்டம்
இதற்கிடையில், ரேணுகாசாமியை கொலை செய்ததை கண்டித்து, சித்ரதுர்கா நகரில், பல்வேறு அமைப்புகள் ஒன்று திரண்டு நேற்று மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். 'தர்ஷனை சும்மா விட கூடாது, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்' உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.பின், நீலகண்டேஸ்வரா சுவாமி கோவில் பகுதியில் இருந்து, கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். தர்ஷனின் உருவ படங்களை காலால் மிதித்தும், தீ வைத்து எரித்தும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். 'ரசிகரையே கொலை செய்த பாவி' என்று அவரது ஏராளமான ரசிகர்களும் ஆவேசமாக பேசினர்.இதுபோன்று, திரைப்பட நடிகை ரம்யா, நடிகர்கள் ஜக்கேஷ், சேத்தன் உட்பட பலரும் தர்ஷன் செயலுக்கு, மறைமுகமாகவும், நேரடியாகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று வீரசைவ மஹா சபா வலியுறுத்தி உள்ளது.இதற்கிடையில், கொலையில் 16 பேர் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மற்ற மூவரை தேடிவருகின்றனர்.தர்ஷன் கைது விஷயத்தில், ஊடகத்தினருக்கு என்ன தகவல் தெரியுமோ, எனக்கும் அவ்வளவு தான் தெரியும். கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். விசாரணையில் என்ன விஷயம் பகிரங்கமாகும் என்று பார்க்கலாம். சட்டம் அனைவருக்கும் சமம். அவருக்கும் சட்டம் ஒன்று தான். யாரும் சட்டத்தை மீற கூடாது.- பரமேஸ்வர், உள்துறை அமைச்சர்மேலுகோட்டே தொகுதி எம்.எல்.ஏ.,வான, சர்வோதயா கர்நாடக பக் ஷா கட்சி தலைவர் தர்ஷன் புட்டண்ணய்யா கூறியதாவது:எனக்கும், நடிகர் தர்ஷனுக்கும் இடையே ஆழமான நட்பு உள்ளது. அவர் எனக்கு நெருக்கமானவர். எங்களுக்குள் நல்லுறவு உள்ளது. எப்போதும் இருக்கும். தர்ஷன் கைதானது குறித்து, எனக்கும் தகவல் வந்தது. அதிர்ச்சியாக இருந்தது.போலீஸ் விசாரணையில், அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும். வழக்கில் தர்ஷனுக்கு தொடர்புள்ளதாக கூறி, அவரை கைது செய்துள்ளனர். இதை நிரூபிக்க வேண்டும். கடந்த ஒரு வாரமாக, நான் அவருடன் பேசவில்லை. இதற்கு முன் அவ்வப்போது சந்திப்போம், பேசுவோம். வழக்கில் என்ன நடந்தது என்பதற்கு, அவரே விவரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தர்ஷன் புட்டண்ணய்யா அதிர்ச்சி
கொலையான ரேணுகாசாமியின் தாய் ரத்னபிரபா சித்ரதுர்காவில் கூறியதாவது:என் மகன் எப்போதும் போல், வெளியில் சென்றார். அவரை கடத்தி சென்று, கொலை செய்துள்ளனர். என் மகன் தவறு செய்வதாக கூறியிருந்தால், நாங்களே புத்திமதி சொல்லி திருத்தி இருப்போம். இரும்பு தடியால் தலையில் அடித்துள்ளனர். உடலை கால்வாயில் வீசி உள்ளனர். இந்த அளவுக்கு கொடூரமான செயல், நம் நாட்டில் நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.என்னுடைய சாபம் தர்ஷனை தாக்குவது உறுதி. அவருடைய மனைவியின் சாபமும் சும்மா விடாது. சர்வ நாசம் ஆகிவிடுவார். என் மகனுக்கு ஏற்பட்ட கதி, அவருக்கும் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
என் மகன் கதிதான் அவருக்கும்!
சிக்கியது எப்படி?
கால்வாயில் கிடந்த ரேணுகாசாமியின் உடல் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, கொலை செய்திருப்பது உறுதியானது. இந்த தகவல் தெரிந்த தர்ஷன், மூன்று பேரிடம், 30 லட்சம் ரூபாய் பேரம் பேசி, போலீசில் சரணடையும்படி கூறியுள்ளார். ஆனால், சரணடைந்தவர்களே, தர்ஷன் தான், தங்களை கொலை செய்யும்படி கூறியதாக, விசாரணையின் போது தெரிவித்தனர். இதன் பின்னரே மைசூரில் நேற்று முன்தினம் காலை தர்ஷன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
என் மகன் கதிதான் அவருக்கும்!
பா.ஜ., - எம்.பி., கோவிந்த் கார்ஜோள் சித்ரதுர்காவில் நேற்று அளித்த பேட்டி:சமுதாயத்தில் இத்தகைய அசம்பாவிதங்கள் நடக்க கூடாது. ரேணுகாசாமியால் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டிருந்தால், அவர் மீது போலீசாரிடம் புகார் அளித்திருக்கலாம். இதுபோன்ற கொடூரத்தை செய்திருக்க கூடாது. யார் தவறு செய்திருந்தாலும், கடுமையாக தண்டிக்க வேண்டும்.ரேணுகாசாமியை கடத்தி சென்று, சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். இதை கேள்விப்பட்டு மனதுக்கு வருத்தமாக இருந்தது. ஹூப்பள்ளி, சித்ரதுர்காவில் அவ்வப்போது இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. இது குறித்து, அரசு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். ரேணுகாசாமி குடும்பத்தினருக்கு, நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., - எம்.பி., ஆவேசம்