| ADDED : ஜூன் 21, 2024 05:33 AM
பெங்களூரு: நாகரஹொளே புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணியரின் வசதிக்காக, மூன்று மினி சபாரி பஸ்களை, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அறிமுகம் செய்தார்.மைசூரு மாவட்டம், நாகரஹொளே புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணியர் வசதிக்காக, வனப்பகுதிக்குள் சபாரி செல்வதற்கு, புதிதாக மூன்று மினி பஸ்கள் வடிவமைக்கப்பட்டன. இதனை, கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அறிமுகம் செய்தார்.பின், அவர் கூறியதாவது:மைசூரு தசரா யானை அர்ஜுனா இறந்த ஹாசனின் யசலுார் கிராமத்தில் சமாதியும்; பராமரிக்கப்பட்டு வந்த நாகரஹொளே பல்லே யானை முகாமில் நினைவு சின்னமும் அமைக்கப்படும். முகாம்களில் வளர்க்கப்பட்டு வந்த சில யானைகள் இறந்தது மிகவும் வருத்தமான செய்தி. இதற்கான காரணம் கண்டறியும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.வனப்பகுதிக்குள், விலங்குகளை வேட்டையாடுவோரை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு, கூடுதலாக தலா 2,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். நிதித்துறை அனுமதி அளித்ததும் அமல்படுத்தப்படும்.நாகரஹொளே புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணியரின் வசதிக்காக, மூன்று மினி பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தலா 16.55 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ளது.ரமேஷ் கோவிந்த் வழங்கிய 14.81 லட்சம் ரூபாய்; கோவை ஹரி சாந்தாராம் வழங்கிய 20 லட்சம் ரூபாய் மூலம் பஸ்கள் வாங்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.பின், சபாரி வாகனத்திலேயே விகாஸ் சவுதா வளாகத்துக்கு வந்து, புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 15வது கூட்டத்தில் பங்கேற்றார். மைசூரு மண்டல தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி மாலதிபிரியா, கர்நாடக புலிகள் பாதுகாப்பு அதிகாரி ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.