| ADDED : மே 30, 2024 10:00 PM
பீதர், - 'ஜெய் ஸ்ரீராம்' பாடலை ஒலிபரப்பியதால், இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது.பீதர் டவுன் காந்திகஞ்ச் பகுதியில் குருநானக் தேவ் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில் நேற்றும், இன்றும் ஆண்டு விழா நடக்க இருந்தது. கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்கு தயாராகும் வகையில் நேற்று முன்தினம் இரவு, கல்லுாரியில் உள்ள ஆடிட்டோரியத்தில் ஹிந்து மாணவர்கள், ஜெய் ஸ்ரீராம் பாடலை ஒலிபரப்பி ஒத்திகை நடனம் ஆடினர்.இதற்கு வேறு மத மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பு மாணவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. தகவல் அறிந்த காந்திகஞ்ச் போலீசார் அங்கு சென்று, மாணவர்களை சமாதானப்படுத்தினர்.மோதல் குறித்து இருதரப்பு மாணவர்களும் அளித்த புகாரில், காந்திகஞ்ச் போலீசார் விசாரிக்கின்றனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க, கல்லுாரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மோதல் எதிரொலியாக ஆண்டு விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.