பெங்களூரு: ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதால், மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம், அவருக்கு அறிவுரையும் கூறியது.மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து, எங்கள் கர்நாடகா ஹோட்டலில், வெடிகுண்டுகளை வைக்கின்றனர். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார்.இதற்கு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தான் பேசியது தவறு என்பதை உணர்ந்த ஷோபா, மன்னிப்பு கோரினார்.அவரது பேச்சு, தேர்தல் நடத்தை விதிமீறல் என டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில், தி.மு.க., புகார் அளித்திருந்தது. இதையடுத்து, தேர்தல் கமிஷன் தரப்பில், பெங்களூரு காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஷோபா மீது நேற்று முன்தினம் மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி, அமைச்சர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், நீதிபதி கிருஷ்ணா தீட்சித் நேற்று விசாரணை நடத்தினார். வழக்கு மீது விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.மேலும், ''ஒரு நாகரிக சமுதாயத்தை பராமரிக்க அனைத்து கட்சி தலைவர்களும் நிதானம் காட்ட வேண்டும். பொது இடங்களில் பேசுகையில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதை கடைப்பிடிக்கா விட்டால் இந்தியாவின் எதிர்காலம் என்னவாகுமோ,'' என்று நீதிபதி அறிவுரையுடன் கவலையை வெளிப்படுத்தினார்.இதுபோன்று, நகரத்பேட்டையின் ஒரு கடையில், 'ஹனுமன் சாலிசா' ஒலிபரப்பிய நபரை, ஒரு கும்பல் தாக்கியதை கண்டித்து, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை துாண்டி விட்டதாக கூறி, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா மீது, ஹலசூரு கேட் போலீசில் வழக்கு பதிவானது.இவ்வழக்கு விசாரணைக்கு தடை கோரி, அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணைக்கும், நீதிபதி கிருஷ்ணா தீட்சித் நேற்று தடைவிதித்தார்.