தமிழக அமைச்சர் உதயநிதி பெங்களூரில் தி.மு.க.,வினரை சந்திக்காமல் சென்னை சென்றார். இதற்கு, கோஷ்டி பூசலே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுபவர் அமைச்சர் உதயநிதி. முதல்வர் ஸ்டாலினுக்கு நிகராக, கர்நாடகாவிலும் அவரது கட்சியினர், அவரை மதிக்கின்றனர்.பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக, நேற்று முன்தினம் மாலையே, பெங்களூரில் உள்ள அவரின் அத்தை செல்வி வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு கட்சிக்காரர்கள் யாரையும் சந்திக்கவில்லை. இரவிலும் அங்கேயே தங்கினார்.நேற்று காலை 9:30 மணிக்கு தனியார் ஹோட்டலுக்கு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு காலை 10:20 மணிக்கு சிட்டி சிவில் நீதிமன்றத்தை சென்றடைந்தார். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அவரை வரவேற்க, நீதிமன்ற வளாகத்தில் பூங்கொத்து, சால்வைகள் கொடுத்து வரவேற்க, இடது புறம், வலது புறம் என இரு பக்கமாக கர்நாடகா தி.மு.க.,வின் இரு கோஷ்டியினர், தனித் தனியாக காத்திருந்தனர். ஆனால், யாரையும் சந்திக்காமல் நீதிமன்றத்துக்குள் சென்று விட்டார்.வழக்கு விசாரணை முடிந்து, 11:30 மணிக்கு வெளியே வந்தார். அப்போதும் கர்நாடக தி.மு.க.,வினரை உதயநிதி சந்திக்கவில்லை; கண்டுகொள்ளவும் இல்லை. இதற்கு பாதுகாப்பு ஒரு காரணமாக இருந்தாலும், தி.மு.க., கோஷ்டியாக பிரிந்து இருந்தால், சந்திக்க விருப்பம் இல்லாமல் அதிருப்தியில் சென்றதாகவும் தெரிகிறது.உதயநிதி தாத்தா கருணாநிதி காலத்தில் இருந்து, கட்சியில் கொடி துாக்கி, கோஷமிட்டு, கர்நாடகாவிலும் கட்சி உள்ளதை வெளிப்படுத்திய பழைய சம்பவங்களை, அமைச்சர் உதயநிதிக்கு எடுத்து சொல்ல ஆளில்லாமல் போய் விட்டது.- நமது நிருபர் --