| ADDED : செப் 11, 2024 05:20 AM
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில், 32 ஆண்டுக்குப் பின், காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுகிறார்.ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு, வரும், 18, 25, அக்., 1ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ராஜ்போரா சட்டசபை தொகுதியில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்தாஸ் அதவாலேயின் குடியரசு கட்சி சார்பில் டெய்சி ரெய்னா போட்டியிடுகிறார்.கடந்த, 1990களில், காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டிட்கள் பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். அதில், டெய்சி ரெய்னாவின் குடும்பமும் ஒன்று. டில்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், 2020ல் காஷ்மீருக்கு திரும்பினார்.புல்வாமா மாவட்டம் பிர்சால் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக தேர்வானார். தற்போது சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இதன் வாயிலாக, 32 ஆண்டுக்குப் பின், சட்டசபை தேர்தலில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுகிறார்.