உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நெய், எண்ணெய் சேமித்து வைத்த கிணறு வரலாற்று கதை சொல்லும் கவலேதுர்கா கோட்டை

நெய், எண்ணெய் சேமித்து வைத்த கிணறு வரலாற்று கதை சொல்லும் கவலேதுர்கா கோட்டை

நாட்டில் மன்னராட்சி மாயமாகி, மக்களாட்சி துவங்கி பல காலம் ஆகிறது. அன்றைய மன்னர்களின் ஆளுமைத்திறன், வீரம், விவேகத்தை விவரிக்கும் அடையாள சின்னங்கள், இப்போதும் நம் கண் முன்னே நிற்கின்றன. குறிப்பாக கோட்டைகளை கூறலாம்.கர்நாடகாவின் மைசூரு, பெங்களூரு, சித்ரதுர்கா, பாகல்கோட் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோட்டைகள் உள்ளன. ஷிவமொகாவில் 'கவலேதுர்கா கோட்டை' உள்ளது. இது சாதாரண கோட்டை அல்ல. சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கும், சுற்றுலா தலமாக விளங்குகிறது. கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை மடியில், கோட்டை அமைந்துள்ளது. கலை நுணுக்கங்கள் கொண்டது.

9வது நுாற்றாண்டு

ஓய்வின்றி வேலை, பரபரப்பான நகர வாழ்க்கையால், வெறுப்படையும் மனம் அமைதி, நிம்மதியை தேடும். இவர்களுக்காகவே கவலேதுர்கா கோட்டை காத்திருக்கிறது. இங்கு சுற்றுலா வந்து, மன அமைதி பெறலாம். இது ஒன்பதாவது நுாற்றாண்டில் மிகவும் அழகான கோட்டையாகும். கெளதி சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியதாக, வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.மலைப்பகுதியான கவலேதுர்கா, வரலாற்று பிரசித்தி பெற்றது. இந்த கோட்டை பல யுத்தங்களுக்கு சாட்சியாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் மல்லவர்கள், சாகரா அருகில் உள்ள கெளி என்ற இடத்தில், ராஜ்ஜியம் உருவாக்கி, இக்கேரி, பிதனுாரில் கோட்டைகள் கட்டி, ஆட்சி செய்து வந்தனர்.அன்றைய காலத்தில், மலைப்பகுதியான கவலேதுர்கா, தொலெதம்மா, முன்டிகேதம்மா என்ற பாளையக்கார சகோதரர்கள் ஆளுமைக்கு உட்பட்டிருந்தது. இவர்களை யுத்தத்தில் மல்லவர்கள், கவலேதுர்கா கோட்டையை கைப்பற்றினர்.இந்த கோட்டைக்கு, 'புவனகிரிதுர்கா' என, பெயர் வைத்து ஆட்சி புரிந்தனர். மல்லவர் வம்சத்தில் சிவப்பா நாயக், ராசி சென்னம்மாஜி பிரபலமானவர்கள். சத்ரபதி சிவாஜியின் மகனான ராஜாராமனுக்கு, மல்லவ அரசர்கள் அடைக்கலம் கொடுத்தனர் என்பது, வரலாற்று பக்கங்களில் பதிவாகியுள்ளது.மொகலாய மன்னர் அவுரங்கஜீபுடன் யுத்தம் செய்து, வெற்றி வாகை சூடிய பெருமை, ராணி சென்னம்மாஜிக்கு உள்ளது.மைசூரு மன்னர்கள் ஹைதர் அலி, திப்பு சுல்தானின் தாக்குதலுக்கு ஆளாகி, கவலேதுர்கா கோட்டை நாசமானது. 9வது நுாற்றாண்டில், கட்டப்பட்ட இந்த கோட்டை, 14ம் நுாற்றாண்டில் செலுவரங்கப்பாவால் புதுப்பிக்கப்பட்டது. இது மூன்று சுற்றுகள் கொண்ட கோட்டையாகும். ஒவ்வொரு சுற்றிலும் ஒரு தலைமை வாசல் உள்ளது. கோட்டைக்குள் ஆயுத கிடங்குகள் உள்ளன.கோட்டையின் நடுவில் கோவில்கள், ஒரு பாழடைந்த அரண்மனை உள்ளது. சிகரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் எதிரில் நந்தி மண்டபம், தலைமை மண்டபம் உள்ளது. கோட்டையின் மேற்குப்பகுதியில் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது, அற்புதமான காட்சியாக இருக்கும். அரண்மனைக்குள் சமையலறை, கல்லினால் ஆன அடுப்புகள், குளியலறை உள்ளது.

18 ஏக்கர்

விசாலமான உள் வளாகத்தில், படிகளுடன் கூடிய குளம் உள்ளது. கவலேதுர்கா பகுதி பசுமை போர்வையால் போர்த்தப்பட்டுள்ளது. இங்கு வரலாற்று பிரசித்தி பெற்ற திம்மண்ணா நாயகர் ஏரி உள்ளது. 18 ஏக்கர் கொண்டது. இந்த ஏரி பறவைகளின் ரீங்காரம், மீன்களின் துள்ளாட்டம், வெண்மை நிற பறவைகள் கூட்டத்தால், சுற்றுலா பயணியரை ஈர்க்கிறது. ஏரியில் இருந்து தவழ்ந்து வரும் தென்றல் காற்று, உடலை செல்வது மறக்க முடியாத அனுபவமாகும்.கெளதி மன்னர்கள் கட்டிய, வீரசைவ மடமும் கவலேதுர்காவில் உள்ளது. மடத்தில் இருந்து, ஒரு கி.மீ., துாரம் முன்னோக்கி சென்றால், கோட்டை நுழைவு வாசலை அடையலாம். 50 முதல் 60 அடி உயரமான சுவர்களில், அன்றைய காலத்து சித்திரங்களை காணலாம். காவலாளிகள் தங்கும் அறையும் உள்ளன. அரசர்கள் காலத்தில் நெய், எண்ணெய் சேமித்து வைத்த கிணற்றை காணலாம். இதை இப்போதும் எண்ணெய் கிணறு, நெய் கிணறு என்றே அழைக்கின்றனர்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ