பெங்களூரு: யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பயணியர் வசதிக்காக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு, 2,500 சிறப்பு பஸ்களை இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:யுகாதி, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு, தொடர் விடுமுறைகள் வருகின்றன. ஏப்ரல் 7ல் ஞாயிறு, 9ம் தேதி உகாதி பண்டிகை, ஏப்ரல் 11ல் ரம்ஜான், ஏப்ரல் 13ல் இரண்டாவது சனிக்கிழமை, மறுநாள் ஞாயிறு என, அடுத்தடுத்து விடுமுறை. எனவே வெளியூர்களுக்கு செல்லும் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அத்துடன் மாணவர்களுக்கும் பள்ளி விடுமுறை துவங்கியதால், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல பெங்களூரு மக்கள் தயாராகின்றனர். இதை கருத்தில் கொண்டு, 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டமிட்டுஉள்ளது.ராஜஹம்சா, ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், இ.வி.பவர் பிளஸ், அம்பாரி கிளப் கிளாஸ், அம்பாரி உத்சவ், பல்லக்கி பஸ்களுடன், கூடுதல் பஸ்களும் இயக்கப்படும்.தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா, சிருங்கேரி, ஹொரநாடு, ஷிவமொகா, மடிகேரி, மங்களூரு, தாவணகெரே, கோகர்ணா, கொல்லுார், ஹூப்பள்ளி, தார்வாட், பெலகாவி, விஜயபுரா, கார்வார், பல்லாரி, ஹொஸ்பேட், கலபுரகி, ராய்ச்சூர் என, பல மாவட்டங்களுக்கு, சிறப்பு பஸ்களின் போக்குவரத்து இருக்கும்.தமிழகத்தின் சென்னை, ஊட்டி, கொடைக்கானல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, மஹாராஷ்டிராவின் பனாஜி, ஷிரடி, புனே, கேரளாவின் எர்ணாகுளம், பாலக்காடு என, பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.மெஜஸ்டிக் பஸ் நிலையம், மைசூரின் சாட்டிலைட் பஸ் நிலையம், சாந்திநகர் பி.எம்.டி.சி., பஸ் நிலையத்தில் இருந்து, சிறப்பு பஸ்கள் புறப்படும். டிக்கெட் முன் பதிவு செய்தவர்களுக்கு, டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி சலுகை கிடைக்கும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.