ரூ.1 கோடி ஹெராயினுடன் டில்லியில் சிக்கிய லேடி தாதா
புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் இருந்து ஹெராயின் கடத்தி வந்த, 'லேடி தாதா' ஜோயா கான், 33, டில்லியில் நேற்று கைதானார். அவரிடம் இருந்து, 270 கிராம் ஹெராயின் சிக்கியது; அதன் சர்வதேச மதிப்பு 1 கோடி ரூபாய். கைதானா ஜோயா கான் பற்றி போலீசார் கூறியதாவது:டில்லியின் பிரபல ரவுடி ஹாசிம் பாபாவின் மூன்றாவது மனைவி ஜோயா கான். ஹாசிம் பாபா மீது கொலை, ஆயுத கடத்தல், போதைப் பொருள் கடத்தல் என ஏராளமான வழக்குகள் உள்ள நிலையில், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.ஹாசிம் சிறைக்கு சென்றதும், சிறையில் அவரை அடிக்கடி சந்தித்து, சங்கேத வார்த்தை உள்ளிட்டவற்றை படித்து, கடத்தல் கும்பலின் தலைவியாகி, டில்லி உஸ்மான்புரில் இருந்தபடி செயல்பட்டார்.மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சட்டவிரோத பிசினஸை, அவரது சகோதரி ஹசீனா பார்க்கர் எப்படி பார்த்துக் கொண்டாரோ, அதே பாணியில் செயல்பட்டவர் ஜோயா கான். வெளி உலகில் நவநாகரிகமான பெண் போல காட்டிக் கொண்டார்.விலை உயர்ந்த ஆடை, அலங்காரம், உயர்தர விருந்து நிகழ்ச்சி என வலம் வந்ததோடு, சமூக ஊடகங்களிலும் விதவிதமான படங்களை பதிவிடுவது ஜோயா கான் வழக்கம்.கிரேட்டர் கைலாஷ் பகுதியில், கடந்த 2024 செப்டம்பரில் ஜிம் உரிமையாளரை சுட்டுக் கொன்ற வழக்கில், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டது. பல வழக்குகளில் ஜோயா கான் மீது சந்தேகம் உண்டு. போதைப்பொருள் கடத்தலை முக்கியமாக செய்து வந்தார். தற்போது, ஹெராயினுடன் சிக்கி இருக்கிறார்.எப்போதும் துப்பாக்கி ஏந்தியவர்களின் பாதுகாப்போடு சுற்றும் ஜோயா கானின் குடும்பமே, குற்றப் பின்னணி உடையது தான். இவ்வாறு போலீசார் கூறினர்.