மழைக்காலத்தில் மடிகேரிக்கு சுற்றுலா செல்வது கஷ்டம் என, நினைப்பது தவறான கற்பனை. பூலோக சொர்க்கமான மடிகேரி, மழைக்காலத்தில் காண வேண்டிய இடம் என்பது, உணர்ந்து அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.குடகு மாவட்டத்தில், இயற்கை அழகு ஏராளமாக கொட்டி கிடக்கிறது. விராஜ்பேட், சோமவாரபேட், மடிகேரி என, அனைத்து பகுதிகளும், சுற்றுலா செல்ல தகுதியானவை. பூலோக சொர்க்கம்
குறிப்பாக மடிகேரியை பூலோக சொர்க்கம் என்றால், அது மிகையே அல்ல. பொதுவாக மழைக்காலத்தில், மடிகேரிக்கு செல்வது கஷ்டம் என, பலரும் நினைக்கின்றனர். இது தவறான கருத்தாகும். மழைக்காலத்தில் பனி போர்வை போர்த்திய மலைகள், பனித்துளிகள் படர்ந்த மரம், செடி, கொடி, தோட்டங்களை காண்பதே கண்களை, மனதை கொள்ளை கொள்ளும் அழகாக இருக்கும்.இதை காண சுற்றுலா பயணியர் குவிந்துள்ளனர். சாலையே தெரியாத அளவுக்கு, அடர்த்தியான பனி, லேசாக துாறும் மழையில், உடலை வருடி செல்லும் குளிர் காற்றை அனுபவித்தபடி, சுற்றுலா பயணியர் நடந்து செல்வதை காண முடிகிறது.மடிகேரியின், மலை உச்சியில் ராஜாசாட்டில் சுற்றுலா பயணியர், காதலர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் பனி மூட்டம் நடுவில் நின்று, செல்பி எடுக்கின்றனர். பனிப்பொழிவு
ஜீவநதியான காவிரி ஆறு பிறப்பிடமான தலக்காவிரியின் மலைப் பகுதிகளில், பனிப்பொழிவு அதிகம் உள்ளது. எனவே சுற்றுலா பயணியர் குவிந்துள்ளனர். மழைக்கால ஆரம்ப நாட்களில், மலைகள் மீது ஏறுவது சிறிது கஷ்டம் என்றாலும், மலை மீது ஏறி சென்ற பின், தெரியும் காட்சிகள் அற்புதமாக இருக்கும்.இந்த அழகை ரசிக்கவே, பலரும் மலையேற்றம் செல்கின்றனர். குடகில் உள்ள மலைகள் அபாயமானவை அல்ல. டிரெக்கிங் செல்ல தகுதியானவை. பெரும்பாலான மலைகளின் மீது கோவில்கள் உள்ளன. இத்தகைய மலைகளில், சோமவாரபேட்டின், முக்கோட்லு அருகில் உள்ள கோட்டை மலையும் ஒன்றாகும். இந்த மலையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மலையேற்றம் செய்கின்றனர்.மலையில் பொட்லப்பா ஈஸ்வரன் கோவில் உள்ளது. சுற்றுப்புற கிராமத்தினர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குடகில் உள்ள ஒவ்வொரு மலைகளுக்கும், புராணங்களுக்கும் தொடர்பு உள்ளது. ஆன்மிகவாதிகளுக்கும், சுற்றுலா பயணியருக்கும் தகுந்ததாக உள்ளது. திரவுபதா யுகத்தில் துரியோதனனின் கபட நாடகத்தில் சிக்கிய பாண்டவர்கள், வனவாசம் சென்ற போது குடகின் பல்வேறு இடங்களில் நடமாடியதாக ஐதீகம். அதேபோன்று கோட்டை மலைக்கும் வந்து, ஈஸ்வரனை பூஜிக்கும் நோக்கில் இந்த கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. ஐந்து ஏரி
மலையில் பாண்டவர்கள் தங்கி இருந்த போது, குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் தேவைப்பட்டது. எனவே மலை மீது அம்பு எய்து ஐந்து ஏரிகளை உருவாக்கினர். இப்போதும் ஏரிகளை காணலாம். கோடை காலத்திலும் இவற்றில் தண்ணீர் வற்றுவது இல்லை என்பது, குறிப்பிடத்தக்கது.இயற்கை அழகை தன்னுள்ளே அடக்கியுள்ள, கோட்டை மலைக்கு செல்ல வேண்டுமானால், காடு, மேடுகளை கடந்து செல்ல வேண்டும். உயரமான மலை
கற்கள், முட்களை தாண்டி செல்ல வேண்டும். 9 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். 5,367 அடி உயரமான கோட்டை மலை, மைசூரு மாவட்டத்தின், மூன்றாவது மிக உயரமான மலையாகும்.சுற்றுப்புற இயற்கை காட்சிகளை ரசித்தபடி, மலை ஏறி சென்று சிறிது நேரம் பொழுது போக்கினால், அங்கிருந்து திரும்பவே மனம் வராது.- நமது நிருபர் -