மன அமைதிக்காக மக்கள் அதிகம் செல்லும் இடம் கோவில். என்ன கஷ்டமாக இருந்தாலும் சரி, கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்து விட்டு, ஒரு ஐந்து நிமிடம் அங்கு அமர்ந்து வந்தால், மனதிற்கு ஆறுதலாக இருக்கும். மனதை அமைதியாக வைத்து கொள்ளவும், ஒரு நிலைப்படுத்தவும் தியானம் செய்வதற்கு குகை கோவில் உள்ளது.சிக்கபல்லாப்பூரின் சிந்தாமணி அருகே, கைவாரா கிராமத்தில் உள்ளது கைலாசகிரி குகை கோவில். இக்கோவில் 1,000 ஆண்டு பழமையானது. இந்த கோவில் சிவன், பார்வதி, பிள்ளையாருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. மஹா சிவராத்திரி இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பாண்டவர்கள்
பிரமாண்ட பாறைக்குள் இருக்கும் கோவிலில் சிவன், அம்புஜ துர்க்கை சன்னிதிகள் உள்ளன. மஹாபாரத காலத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது, இந்த குகையில் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. பஹாசூரனை, பீமன் இந்த இடத்தில் தான் கொன்றார் என்றும் நம்பப்படுகிறது. இதனால் கைலாசகிரிக்கு, பாகசுர பேட் என்ற இன்னொரு பெயரும் உள்ளது. பாறைக்குள் இருக்கும் கோவில்களுக்கு சென்று, சுவாமி சிலை முன்பு கண்ணை மூடி மனதில் எதுவும் நினைக்காமல், தியான நிலையில், ஐந்து நிமிடம் அமர்ந்தால் போதும். தியானம் செய்து விட்டு வெளியே வரும் போது, புத்துணர்ச்சி ஏற்படுகிறது. தியானம் முடித்த பின்னர், மலை உச்சியில் நின்று, அடிவாரத்தில் இருக்கும் கிராமங்களை பார்க்கவும்; மாலையில் சூரிய அஸ்தமனத்தையும் கண்டு ரசிக்கவும், கண்கொள்ளா காட்சியாக இருக்கும். குரங்குகள்
அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு ஏறி செல்ல, படிக்கட்டுகள் உள்ளன. குறைந்த படிக்கட்டுகள் இருப்பதால், எளிதில் உச்சிக்கு சென்று விடலாம். ஓய்வு தேவைப்படுவோர் படியில் அமர்ந்து செல்லலாம். மலை உச்சிக்கு செல்லும் வழியில், குரங்குகள் அதிகமாக இருக்கின்றன. இதனால் பக்தர்கள் தங்கள் பொருட்களை, பாதுகாப்பாக எடுத்து செல்வது அவசியம்.பெங்களூரில் இருந்து கைவாரா 90 கி.மீ.,யில் உள்ளது. பஸ்சில் செல்வோர் சிந்தாமணி சென்று, அங்கிருந்து 7 கி.மீ., துாரத்தில் உள்ள கைவாராவை சென்றடையலாம். காரில் செல்வோர் ஹொஸ்கோட் சென்று அங்கிருந்து, சிந்தாமணி சாலையில் பயணிக்க வேண்டும். ரயிலில் செல்வோர் சிந்தாமணியில் இறங்கி அங்கிருந்து, கோவிலுக்கு செல்லலாம்.