உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீயாய் வேலை செய்ய அமைச்சர்கள் யோசனை

தீயாய் வேலை செய்ய அமைச்சர்கள் யோசனை

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நான்கு, ஐந்து முறைக்கு மேல் வெற்றி பெற்ற மூத்த எம்.எல்.ஏ.,க்களை புறக்கணித்துவிட்டு, இரண்டு, மூன்று முறை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பாலானோருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.இதனால் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்தனர். தங்களை அமைச்சர்கள் மதிப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். அதிருப்தியாளர்களை முதல்வர் சமாதானப்படுத்தினார்.லோக்சபா தேர்தலுக்கு பின், முதல்வர் சித்தராமையா நடத்திய ரகசிய சர்வேயில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லாததால், லோக்சபா தேர்தலில் குறைந்த இடம் கிடைத்தது என்று தெரிய வந்தது.சில அமைச்சர்களுக்கு, தங்கள் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. முக்கியமான அமைச்சர்கள் மட்டும்தான் தினமும் ஊடகத்தினரை சந்தித்து, தங்களது துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர். பெரும்பாலான அமைச்சர்கள் எங்கு இருக்கின்றனர்? என்ன செய்கின்றனர் என்று யாருக்கும் தெரியவில்லை. திம்மாபூர், சிவராஜ் தங்கடகி, மங்கள் வைத்தியா, ரஹீம்கான், டி.சுதாகர், எம்.சி.சுதாகர், மது பங்காரப்பா ஆகிய ஏழு அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லை என, முதல்வருக்கு எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்து புகார்கள் சென்றுள்ளன.சமீபத்தில் டில்லி சென்ற முதல்வர் சித்தராமையா அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுடன் ஆலோசனை நடத்தினார்.இதனால் சரியாக செயல்படாத அமைச்சர்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக, இனிமேல் தீவிரமாக வேலை செய்ய யோசனை செய்து வருகின்றனர்.தங்களது துறை அதிகாரிகளுடன் தினமும் ஆலோசனை நடத்தி, துறை சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடுக்கிவிட தயாராக உள்ளனர். ஆனாலும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. மாற்றம் நிகழ்ந்தால் யார் தலை உருளும் என்பதற்கு விடை கிடைத்துவிடும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ