பெங்களூரு: கர்நாடக மேலவையில் கர்நாடக வடகிழக்கு பட்டதாரி, கர்நாடக தென்மேற்கு பட்டதாரி, பெங்களூரு பட்டதாரி, கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர், கர்நாடக தென்மேற்கு ஆசிரியர், கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதிகளின், எம்.எல்.சி.,க்களாக இருப்பவர்களின், பதவி காலம் வரும் 21 ம் தேதியுடன் முடிகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, கடந்த 3ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்தும், காங்கிரஸ் தனித்தும் தேர்தலை சந்தித்தன. ஓட்டு சீட்டு
பட்டதாரி தொகுதியில் போட்டியிட்டவர்களை தேர்வு செய்ய பட்டதாரிகளும், ஆசிரியர்க தொகுதியில் போட்டியிட்டவர்களுக்கு, அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஓட்டு போட்டனர். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடந்ததால், ஓட்டு சீட்டுகளை எண்ணும் பணி நேற்று காலையில் துவங்கியது. தென்மேற்கு, தெற்கு ஆசிரியர் தொகுதிகளுக்கான, ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இரு தொகுதியிலும் ம.ஜ.த., வென்று உள்ளது. நள்ளிரவு வரை...
தென்மேற்கு தொகுதியில் ம.ஜ.த.,வின் போஜேகவுடா 9,829 ஓட்டுகள் பெற்றார். காங்கிரசின் மஞ்சுநாத் குமார் 4,562 ஓட்டுகள் மட்டும் பெற்றார். இதன்மூலம் 5,267 ஓட்டுகள் வித்தியாசத்தில் போஜேகவுடா வெற்றி பெற்றார். 821 ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.தெற்கு ஆசிரியர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மரிதிப்பே கவுடாவை வீழ்த்தி, ம.ஜ.த.,வின் விவேகானந்தா வெற்றி பெற்றார். விவேகானந்தா 7,916 ஓட்டுகளும், மரிதிப்பே கவுடா 4,658 ஓட்டுகளும் பெற்றனர். இருவரும் வெற்றி சான்றிதழ்களை பெற்று கொண்டனர். மற்ற நான்கு தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை நேற்று நள்ளிரவு வரை தாண்டியும் நடந்தது.