மேட்டூர்:கர்நாடகா, மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையின் மொத்த நீர்மட்டம், 65 அடி. கொள்ளளவு, 19.5 டி.எம்.சி., சில மாதங்களாக நீடித்த வறட்சியால் கபினி அணைக்கு வினாடிக்கு, 800 முதல், 1,000 கனஅடி நீர் வந்தது. இந்நிலையில் சில நாட்களாக வயநாடு நீர்பரப்பு பகுதியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடந்த, 24ல், 1,249 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து, நேற்று முன்தினம், 2,008 கனஅடி, நேற்று, 5,875 கனஅடியாக அதிகரித்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம், 45.38 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 46.32 அடியாகவும், 9.09 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 9.51 டி.எம்.சி.,யாகவும் அதிகரித்தது. அணையில் இருந்து கடந்த, 3 நாட்களாக, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை
மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு, 100 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று, 89 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீருக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. திறப்பை விட வரத்து குறைவாக உள்ளதால் நேற்று முன்தினம், 40.60 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 40.43 அடியாக சரிந்தது.