| ADDED : ஜூன் 29, 2024 11:08 PM
மைசூரு: புறா எச்சங்களால் மைசூரு அரண்மனை கட்டடத்திற்கு சேதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக, வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ரங்கராஜ் கூறியுள்ளார்.அரண்மனைகள், பாரம்பரிய கட்டடங்களுக்கு பெயர் பெற்றது மைசூரு நகரம். இங்கு ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன.மைசூருக்கு சுற்றுலா வருவோர் கண்டிப்பாக, மைசூரு அரண்மனையை சுற்றி பார்க்காமல் செல்ல மாட்டார்கள்.அப்பேற்பட்ட அரண்மனை கட்டடம் சேதமடைய வாய்ப்பு இருப்பதாக, வரலாற்று ஆய்வாளரான பேராசிரியர் ரங்கராஜ் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:மைசூரு அரண்மனை முன் ஏராளமான புறாக்கள் உள்ளன. இந்த புறாக்களுக்கு சுற்றுலா பயணியர் கோதுமை, சோளத்தை உணவாக வழங்குகின்றனர்.உணவை சாப்பிட்டு விட்டுச் செல்லும் புறாக்கள், அரண்மனை கட்டடத்தின் மீது எச்சமிடுகின்றன.புறாவின் எச்சத்தில் யூரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் கட்டடங்கள் மீது விழுந்தால், கட்டடத்திற்கு சேதம் ஏற்படும்.புறா எச்சத்தை செம்பு அல்லது இரும்பு பாத்திரத்தில் போட்டு சில நாட்கள் வைத்திருந்தால், அந்த பாத்திரத்தில் ஓட்டை விழும்.அரண்மனை கட்டடத்தின் மீது புறாக்கள் விடும் எச்சத்தால், அரண்மனைக்கு கூட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் புறாக்களுக்கு சுற்றுலா பயணியர், உணவு போடுவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.