உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரச குடும்பத்துக்கு பாதுகாப்பாக திகழ்ந்த நல்குநாடு அரண்மனை

அரச குடும்பத்துக்கு பாதுகாப்பாக திகழ்ந்த நல்குநாடு அரண்மனை

எதிரிகளிடம் இருந்து தங்கள் குடும்பத்தை பாதுகாத்து கொள்ள, குடகின் ஹலேரி ராஜாவான தொட்ட வீர ராஜேந்திரா கட்டிய நல்குநாடு அரண்மனையை பற்றி தெரிந்து கொள்வோம்.குடகு மாவட்டம், மடிகேரியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் விராஜ்பேட் - தலகாவிரி சாலையின் கக்கவே என்ற இடத்தில் இருந்து 2.5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள யவகபாடி கிராமம்.இக்கிராமத்தில், 18ம் நுாற்றாண்டில் கருங்கல், மரக்கட்டைகளால் கட்டப்பட்ட 225 ஆண்டு பழமையான 'நல்குநாடு அரண்மனை' அமைந்து உள்ளது. குடகு மன்னரான தொட்ட வீர ராஜேந்திரா காலத்தில் கட்டப்பட்டது.கடந்த 1780ல் குடகு மன்னரான 'லிங்கராஜா 1' இறப்புக்கு பின், குடகை, ஹைதர் அலி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். லிங்கராஜாவின் மூன்று மகன்களான தொட்ட வீர ராஜேந்திரா, லிங்க ராஜேந்திரா, அப்பண்ணா ஆகியோர் சிறுவர்கள் என்பதால், அப்போது குடகின் தலைநகராக இருந்த 'மெர்கரா'வுக்கு அவர்களை கொண்டு சென்றார். கடந்த, 1782 வரை அவரின் கண்காணிப்பில் இருந்த மூவரும், ஹைதர் அலி இறப்புக்கு பின், அவரது மகன் திப்பு சுல்தான், மூவரையும் பிரியாபட்டணாவில் உள்ள கோரூருக்கு கொண்டு சென்றுவிட்டார்.

படைகள் மீது தாக்குதல்

தங்கள் மன்னனை கொன்று, அவரது மகன்களை சிறைபிடித்து சென்ற ஹைதர் அலி, திப்பு சுல்தான் மீது, குடகு மக்கள் கோபத்தில் இருந்தனர். அவ்வப்போது, திப்புசுல்தான் படைகள் மீது தாக்குதலும் நடத்தி வந்தனர்.கடந்த 1786ல் பிரியா பட்டணாவில் இருந்து தப்பிய தொட்ட வீர ராஜேந்திரா, குடகிற்கு வந்தார். தன்னை மன்னராக முடிசூட்டி கொண்டார். அவருக்கு, குடகு மக்கள் ஆதரவாக இருந்தனர். இதனால் கோபமடைந்த திப்பு சுல்தான், போர் தொடுத்தார். இந்த போரில், சில கோட்டைகளை திப்பு சுல்தான் பிடித்தாலும், அவரது படை பெரும் சேதத்தை சந்தித்தது.அங்கிருந்து தப்பிய தொட்ட வீர ராஜேந்திரா, நல்குநாடு அரண்மனையில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து சுரங்கப்பாதை வழியாக, மடிகரேவுக்கு தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. தொட்ட வீர ராஜேந்திராவுக்கு நான்கு மகள்கள் மட்டுமே இருந்தனர். மகன்கள் இல்லை. தொட்ட வீர ராஜேந்திரா இறப்புக்கு பின், ஆங்கிலேயர் ஆதரவுடன் அவரது சகோதரர் லிங்க ராஜேந்திரா ஆட்சியில் அமர்ந்தார். அவருக்கு பின், அவரது மகன் சிக்க வீர ராஜேந்திரா மன்னரானார்.ஆங்கிலேயருடன் மோதல் ஏற்பட்டதால், குடகு மீது ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். ஆங்கிலேயரிடம் சரணடைந்த அவர், வாரணாசியில் உள்ள பனாரசுக்கு நாடு கடத்தப்பட்டார். இவரே, குடகின் கடைசி மன்னராவார்.இத்தகைய பிரசித்தி பெற்ற அரண்மனை இரண்டு தளமாக கட்டப்பட்டு உள்ளது. இங்குள்ள மர வேலைகள், ஓவியங்கள், பாரம்பரியத்தை நினைவகூரும். அரண்மனையின் சுவர்களில் சில அசல் ஓவியங்கள் மீட்டெடுக்கப்பட்டு உள்ளன. இதில், மன்னர் ஊர்வலத்தில் செல்லும் ஓவியங்கள் உட்பட காவலர்கள், இசை குழுவினர் சூழப்பட்ட யானைகள் மீது சவாரி செய்யும் ஓவியம் இடம் பெற்றுள்ளது. அரண்மனைக்கு பின்புறம், கைதிகளை அடைத்து வைக்கும் நான்கு இருட்டு அறைகள் உள்ளன.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து நல்குநாடு அரண்மனைக்கு விமான வசதியோ, ரயில் வசதியோ இல்லை. மைசூருக்கோ அல்லது கண்ணுார் சர்வதேச விமான நிலையத்துக்கோ செல்லலாம். மடிகேரி வரை ரயிலில் செல்லலாம். மடிகேரியில் இருந்து பஸ்சில் நல்குநாடு அரண்மனைக்கு டாக்சியில் செல்லலாம்.அரண்மனை சுற்று வட்டாரத்தில் ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. இவை அனைத்தும் அரண்மனையில் இருந்து நடந்து செல்லும் துாரத்தில் தான் உள்ளது. குடகின் பல பகுதிகளில் ஹோம் ஸ்டேக்கள், ரிசார்ட்கள், ஹோட்டல்கள் உள்ளன.� நல்குநாடு அரண்மனையின் நுழைவு வாயில். �இரண்டு தளம் கொண்ட அரண்மனை முழு தோற்றம். � அரண்மனையில் இன்றும் காணப்படும் ஓவியங்கள். � மன்னர் குடும்பத்தில் திருமணங்கள் நடந்த மேடை. இடம்: குடகு- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ