குடிநீரில் கழிவுநீர் முதியவர் பலி
மைசூரு: அசுத்தமான குடிநீர் குடித்ததில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் பாதிக்கப்பட்ட 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.மைசூரு, சாலிகிராமத்தின் பெட்டஹள்ளி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நேற்று முன்தினமும் வழக்கம்போல் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. தண்ணீர் அசுத்தமாக இருந்ததாக புகார் எழுந்தது.இதை குடித்த பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக சாலிகிராம சமுதாய சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். கோவிந்தேகவுடா, 65, என்பவர், தீவிர சிகிச்சைக்காக ஹாசன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலையில் அவர் உயிரிழந்தார்.பாதிக்கப்பட்ட மேலும் 12 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாலுகா மருத்துவமனை டாக்டர்கள், பெட்டஹள்ளி கிராமத்துக்கு வந்து, மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர்.தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கிராமத்துக்கு வந்தனர். மக்கள் பயன்படுத்திய குடிநீர் மாதிரியை சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பினர்.